புதுச்சேரி:
புதுச்சேரியில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தொற்று எண்ணிக்கை 242 ஆக உயர்ந்துள்ளது.ஜிப்மர் மருத்துவமனையில் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டுள்ள 80 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி புதனன்று உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.இந்நிலையில், புதுச்சேரி மாநில சுகாதார இயக்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் புதனன்று (ஜூன்17) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, எம்.பி.க்கள் கோகுல கிருஷ்ணன், வைத்திலிங்கம், தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார், அரசு செயலர் பிரசாந்த் குமார் பாண்டா சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் உள்ளிட்ட சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் சுகாதார துறையில் பணியாற்றும் ஆஷா பணியாளர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது, நோய்த் தொற்று தடுப்பதற்கு புதுச்சேரி பிரதேச எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.குறிப்பாக சென்னையில் இருந்து இ- பாஸ் பெற்று வருபவர்களை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.