முசாபர்பூர்:
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணியில் சல்மான் கான் உள்ளிட்ட 8 பேர் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஞாயிற்றுக் கிழமை வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. அவரது மரணம் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
அதேசமயம் சுஷாந்த் சிங்கின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்திருக்கும் நிலையில், தூக்குக்கயிறு கழுத்தில் இறுக்கியதால் மூச்சு திணறி உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்திருந்தது.நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. திரைத்துறைக்குள் இருக்கும் வாரிசு அரசியல், அதிகார துஷ்பிரயோகம், பின்புலம் இல்லாமல் துறைக்குள் வருபவர்களை வாரிசுகள் நடத்தும் விதம் என பல்வேறு பிரச்சனைகள் குறித்து பல பிரபலங்கள் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா என்பவர் பீகார் மாநிலம் முஷாபர்பூர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார். சல்மான் கான் உள்ளிட்டோர் கொடுத்த அழுத்தம் காரணமாக சுமார் 7 படங்களில் இருந்து சுஷாந்த் சிங் நீக்கப்பட்டதாகவும், அதனால் பட வாய்ப்பு இல்லாமல் மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் வழக்கறிஞர் சுதிர்குமார் குற்றம்சாட்டியுள்ளார். அதில் பிரபல நடிகர் சல்மான் கான், கரண் ஜோஹர், சஞ்சய் லீலா பன்சாலி, ஏக்தாகபூர் உள்ளிட்ட 8 பேர் மீது சுஷாந்த் சிங் ராஜ்புத்தை தற்கொலைக்கு தூண்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
சல்மான் கான் உள்ளிட்ட 8 பேர் மீது சட்டப்பிரிவு 306, 109 உள்ளிட்ட 4 பிரிவுகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா தெரிவித்துள்ளார்.முன்னதாக திரைப்பட வாய்ப்புகள் வரவிடாமல் தனது திரை வாழ்க்கையை நாசமாக்கியது சல்மான் கானும் அவரது குடும்பத்தினரும் தான் என்று தபாங் பட இயக்குநர் அபினவ் சிங் காஷ்யப் குற்றம் சாட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.