புதுதில்லி:
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் சென்று வழிபட உரிமை உள்ளது என்று தீர்ப்பு வழங்கியதற்காக, தனக்கு சமூகவலைத்தளங்களில் மிரட்டல்கள் வந்ததாக உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இதுதொடர் பாக சந்திரசூட் பேசியுள்ளார். “சபரிமலைத் தீர்ப்புக்குப் பின், எனது நீதிபதி நண்பர்களும், உதவியாளர்களும் என்னிடம் வந்து, ‘நீங்கள் சமூகவலைதளத்தைப் பயன்படுத்த வேண்டாம். அது அச்சமூட் டும் வகையில் இருக்கிறது. உங்கள்தீர்ப்பு குறித்து மோசமான கருத்துகளும் அச்சுறுத்தல்களும் பரவி வருகிறது’ என்றனர். மேலும், என்னுடையபாதுகாப்பு குறித்தும் அவர்கள் கவலைப்படுவதாக தெரிவித்தனர்.இதுபோன்ற விமர்சனங்கள் எதிர்பாராத ஒன்றல்ல. ஒரு நீதிபதியாக எங்களுக்குத் தைரியமான மனநிலை தேவைப்படுகிறது. அதையெல்லாம் உணர்ந்துதான் தீர்ப்பளிக்கிறோம். அதனால்தான், பெண் களை வெளியேற்றுவதற்கான சபரிமலையின் நடைமுறை ‘தீண்டாமைக்கு’ ஒப்பானது; வழிபடுவதற்கான சுதந்திரத்தை அரசியல் சாசனம் கொடுத்திருக்கும்போது, இப்படியான நடைமுறை சட்டத்துக்கு எதிரானது என்று தீர்ப்பளித்தோம்.
சபரிமலை வழக்கில், எனது சகாக்களில் ஒருவரான நீதிபதி இந்து மல் ஹோத்ராவிடம் கருத்து வேறுபாடு இருந்தது. அவரிடம் ஒரு மாறுபட்ட பார்வை இருந்தது, நான் அதை மதிக்கிறேன்.என்னுடைய பெண் உதவியாளர்கள்கூட, ‘பெண்கள் உரிமை தொடர்பான வழக்கு ஒன்றில் எப்படி ஒரு பெண் நீதிபதி அதிருப்தி தெரிவிக்க முடியும்?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு நான், ‘ஏன் எப்போதும் ஆணும், பெண்ணும் ஒரே மாதிரியாக சிந்திக்க வேண்டும் எனக் கருதுகிறீர்கள்; நாங்கள் அனைவரும் சட்டவல்லுநர்கள்; அப்படி மட்டுமே பாருங்கள்’ என்றேன்.இவ்வாறு டி.ஒய். சந்திரசூட் பேசியுள்ளார்.சபரிமலை வழக்கை, அன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில், ஆர்.எப். நாரிமன், ஏ.எம். கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் இந்து மல் ஹோத்ரா என ஐந்து நீதிபதிகள் கொண்டஅரசியல் சாசன அமர்வு விசாரித்தது.