புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது; இதுவரை 2 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். நாட்டையே கொரோனா அச்சம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு குடும்பங்கள் (34 சதவிகித குடும்பங்கள்) உச்சகட்ட வறுமையில் தள்ளப்பட்டிருப்பதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy- CMIE) அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த குடும்பங்களால் இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்றும் ஊரடங்கு பிரச்சனையை சமாளிக்கும் விதத்தில், அவர்களின் கையில் பணமோ பொருளோ இல்லை என்றும் சிஎம்ஐஇ அமைப்பு கூறியுள்ளது.ஏப்ரல் மாதத்தில் 2.7 கோடி இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர்; இவர்கள் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்கள். அதேபோல, 30 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களில் சுமார் 3.3 கோடிப் பேர் தங்களது வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். இந்திய மாநிலங்களிலேயே அதிகபட்சமாக, புதுச்சேரியில் வேலையின்மை விகிதம் 75.8 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் வேலையின்மை விகிதம் 49.8 சதவிகிதமாக இருந்துள்ளது. 84 சதவிகித இந்திய குடும்பங்களின் மாதாந்திர வருமானம் குறைந்து விட்டது என்றும் சிஎம்ஐஇ புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக பீகார், ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களை கண்டறிந்துள்ள பொருளாதாரக் கண்காணிப்பு மையம், ஒப்பீட்டளவில், தில்லி, பஞ்சாப், கர்நாடக மாநிலங்களில் பாதிப்பு குறைவு என்று கூறியுள்ளது.
“இந்தியாவின் நகர்ப் புறங்களில் வாழும் 65 சதவிகித குடும்பங்களிடம் அடுத்த ஒரு வார காலத்துக்குத் தேவையான பொருட்கள் உள்ளன. ஆனால் இந்தியாவின் முதுகெலும்பான கிராமப்புறங்களில் 54 சதவிகித குடும்பங்களிடம் மட்டும்தான் அடுத்த 1 வாரத்துக்கு தேவையான பொருட்கள் கைவசம் இருக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ள பொருளாதாரக் கண்காணிப்பு மையம், இந்தியாவில் வறுமை அதிகரித்து வரும் நிலையில், மக்களின் கையில் பணம் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை ஆட்சியாளர்கள் உடனடியாக செய்ய வேண்டும் என்ற பரிந்துரையையும் வழங்கியுள்ளது.