புதுச்சேரி,மே.24-புதுச்சேரி மக்களவைத் தொகுதியின் வாக்குகள் மே 23 ஆம் தேதி காலை 8 மணிக்கு எண்ணத் துவங்கி நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் முடிவுகள் அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த தேர்தலில் மதச் சார் பற்ற கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதலமைச்சர், சட்டப் பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் போட்டியிட்டார். அவர் 4,44,981 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக,பாஜக கூட்டணியின் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் டாக்டர். கே. நாராணசாமி 2,47,956 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். மக்கள் நீதிமையம் சார்பில் போட்டியிட்ட டாக்டர் எம்.ஏ.சுப்பிர மணி 38,068 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட என்.ஷர்மிலாபேகம் 22,842 வாக்குகளும் பெற்றனர். இந்த தொகுதியில் போட்டியிட்ட 19 வேட் பாளர்களில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை தவிர மற்ற அனைவரும் டெபாசிட்டை இழந்தனர்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வெ.வைத்திலிங்கம், முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம், காங்கிரஸ் மேலிட பொருப் பாளர் சஞ்சய்தத், திமுக அமைப்பாளர்கள் சிவா,எம்.எல்.ஏ., சிவக்குமார், சிபிஎம் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், பிரதேசக்குழு உறுப்பினர் தா.முருகன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் சலீம், விசுவநாதன்,உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களுடன் சென்று, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான அருணை சந்தித்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்று கொண்டார். அதனைத் தொடர்ந்து முதல்வர் நாராணசாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் வைத்திலிங்கத்திற்கு பூச்செண்டு கொடுத்து கதராடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.