புதுதில்லி:
மத்திய முன்னாள் நிதித்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க், விருப்ப ஓய்வில்செல்வது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜகா வாங்கியுள்ளார்.மத்திய நிதித்துறை செயலாளராக இருந்த சுபாஷ் சந்திர கார்க்கின் பதவிக் காலம் 2020-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி வரை இருக்கும் நிலையில், திடீரென அவர் மின்சக்தி அமைச்சகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. காரணம், கார்க் ஏற்கெனவே வகித்துவரும் பதவிக்கு, இணையான பதவி இது அல்ல என்பதே ஆகும். இதனால், விரக்தி அடைந்த சுபாஷ் சந்திர கார்க், ஜூலை 24-ஆம் தேதி விருப்ப ஓய்வுக் கடிதம் அளித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. உயர்பதவியில் உள்ள ஒரு அதிகாரியை மோடி அரசு அவமானப்படுத்தி விட்டதாக விமர்சனங்களும் எழுந்தன.
இந்நிலையில், கார்க்கின் விருப்ப ஓய்வுக் கடிதம் குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.தன்னுடைய துறையின் செயலாளராகஇருந்தவர், இடமாற்றம் செய்யப்பட்டதை ஏற்காமல் விருப்ப ஓய்வில் சென்றிருக்கிறார் எனும்போது, ‘அதுகுறித்து தனக்கு எதுவுமே தெரியாது’ என்று போகிற போக்கில் கூறியிருப்பதன் மூலம், நிதியமைச்சர் எதையோ மறைக்க விரும்புவதாக பேச்சு எழுந்துள்ளது.