புதுதில்லி:
சங்-பரிவார் அமைப்புகளிடமிருந்து, தனக்கு ஏராளமான கொலை மிரட்டல்கள் வருவதாக, உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் புகார் தெரிவித்துள்ளார்.வழக்கறிஞர் ராஜீவ் தவன், நாட்டின் சிறந்த வழக்கறிஞர்களில் ஒருவராக அறியப்படுபவர். பன்னாட்டு நீதிபதிகள் விசாரணை ஆணையத்திலும் பணியாற்றியுள்ளார். அந்த வகையில், சன்னி வக்பு வாரியமானது, பாபர்மசூதி நிலம் தொடர்பான வழக் கில், ராஜீவ் தவானையே தனதுவழக்கறிஞராக அமர்த்தி இருந் தது. அவரும் மிகச்சிறப்பாக வாதாடினார். எனினும், உச்ச நீதிமன்றத்தீர்ப்பு மாறாக அமைந்து விட்டது.இந்நிலையில்தான், இஸ்லாமியர் தரப்புக்கு ஆஜரானதற்காக தனக்கு சங்-பரிவார் அமைப்புக் களிடமிருந்து கொலை மிரட்டல் கள் வருவதாக ராஜீவ் தவான் புகார் கூறியுள்ளார். மேலும், எவ்வளவு மிரட்டல்கள் வந்தாலும் தனதுநிலையை மாற்றிக் கொள்ளப் போதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.“அயோத்தி வழக்கில் தற்போதைய தீர்ப்பைப் பொறுத்தவரை அது அநீதி என்பதே எனது கருத்து. நிச்சயமாக நீதி என்றுசொல்ல முடியாது. அதனால்தான்,சீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும் என்று கூறுகிறேன். எனினும், அது சன்னி வக்பு வாரியத்தின் விருப்பம். அதேநேரம் பாபர் மசூதி தொடர்பாக நடத்தப்பட்ட அனைத்தும், இந்து வன்முறை என்று நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன். மசூதியை இடித்தவர்களை, ‘இந்து தலிபான்கள் என்று உச்ச நீதிமன்றத்திலேயே குறிப்பிட்டிருக்கிறேன். இதனை எப்போதும் சொல்வேன். அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்” என்று ராஜீவ் தவான் குறிப்பிட்டுள்ளார்.