புதுதில்லி:
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு நகரம் முழு சூரிய மின்சக்தி நகரமாக மாற வேண்டும்என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இதனால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுமோ என்று விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
மின்துறை அமைச்சகம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சகத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது மின்துறை அமைச்சகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகங்களின் பணிகளை ஆய்வு செய்தார். இந்தக் கூட்டத்தில் மின்துறையை பாதிக்கும் பிரச்சனைகளை குறைக்க, மாற்றியமைக்கப்பட்ட கட்டண கொள்கை, மின்சார (திருத்தம்) மசோதா 2020 உள்ளிட்ட கொள்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.இக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறுகையில், எல்லா பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு காணாமல், ஒவ்வொரு மாநிலத்தின் செயல்பாட்டை மேம்படுத்த, அந்தந்த மாநிலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு மின்துறை அமைச்சகம் தீர்வு காண வேண்டும். டிஸ்காம்நிறுவனங்கள் தங்களது செயல்திறன் அலகுகளை, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடுவதை மின்துறை அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் டிஸ்காம் நிறுவனங்களின் கட்டணங்களை, மக்கள் பிறவற்றுடன் ஒப்பிட்டு அறிய முடியும்.
மின்துறையில் பயன்படுத்தப்படும் சாதனங்கள் இந்தியாவில் தயாரித்தவையாக இருக்க வேண்டும். வேளாண் துறைக்கு உதவும் சூரிய மின்சக்தியை, குடிநீர் குழாய்கள் முதல் குளிர்பதன கிடங்குகள் வரை அனைத்திலும் முழுமையாகப் பயன்படுத்தும் வகையிலான ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம். மேற்கூரையில் சூரிய மின்சக்தி தகடுகளைப் பொருத்துவது, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு நகரம் முழு சூரிய மின்சக்தி நகரமாக இருக்க வேண்டும். சூரிய மின்சக்தி மற்றும் காற்று மின்சக்தி மூலம் கடலோரப் பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் வகையில் உள்ள மின்சார சட்டத்திருத்த மசோதாவைக் கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் கட்சியினர் போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் சூரிய மின்சக்தி நகரம் உருவாக்க வேண்டும் என்ற மோடியின் பேச்சு,விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என விவசாயிகள் அமைப்பினர் கூறுகின்றனர்.