புதுதில்லி:
‘ஜெய் ஸ்ரீராம்’ கூறுமாறு, கடந்த ஒருவாரத்தில் மட்டும், 2 மதரசா ஆசிரியர்கள் உட்பட 3 இஸ்லாமியர்கள் மீது இந்துத்துவா வெறிக்கூட்டம் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. இதில், மதரசா ஆசிரியர்களான தில்லியைச் சேர்ந்த முகம்மது மோமின், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஹபீஸ் முகம்மது ஷாரூக் ஹால்தர் ஆகிய 2 பேரும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். மோமின் தில்லி சாலையில், அடித்துத் தூக்கி வீசப் பட்டார். ஹால்தர் ரயிலிலிருந்து தள்ளி விடப்பட்டார்.
அதேநேரம், மின்கம்பத்தில் கட்டிப் போடப்பட்டு, சுமார் 7 மணிநேரம் தாக்கப்பட்ட, ஷாம்ஜெட்பூரைச் சேர்ந்த ஷாம்ஸ் தப்ரிஸ், பரிதாபமான முறையில் இறந்துபோனார்.இந்நிலையில், இந்துத்துவா கும்பல், கடவுள் ஸ்ரீராமனின் பெயரைப் பயன்படுத்தி, வன்முறையை அரங்கேற்றுவதற்கு, பரவலாக இந்துக்கள் மத்தியிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது. தயவுசெய்து, ஸ்ரீராமனின் பெயரால், இஸ்லாமியர்களைத் தாக்காதீர்கள் என்று, இந்துக்களே பலர் ட்விட்டரில், #NoToJaiShriRam என்ற ஹேஷ்டேக் உருவாக்கி, அதனை டிரெண்ட் ஆக்கியுள்ளனர்.