புதுச்சேரி:
புதுச்சேரியில் தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வி கட்டணம் கேட்டுபெற்றோர்களை நிர்ப்பந்திப்பதற்கு இந்திய மாணவர் சங்கம் கடும்கண்டனம்தெரிவித்துள்ளது.இதுகுறித்து சங்கத்தின் புதுச்சேரி பிரதேச தலைவர் ச.ஜெயபிரகாஷ், செயலாளர் கு. விண்ணரசன் ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மற்றும் 55 நாட்களாக தொடர்ந்து வரும் ஊரடங்கினால் அனைத்து தரப்பட்ட மக்களும் கடுமையாக பாதிப்புக் குள்ளாகியுள்ளனர். குறிப்பாக கிராமப்புற - நகர்ப்புற மக்கள் வேலை இழந்து வருமானம் இழந்து பொருளாதார ரீதியாக பாதிப்படைந்துள்ளனர். இதனை அறிந்து புதுச்சேரி பள்ளி கல்வித் துறை இயக்குனர் கடந்த வாரம் தனியார் பள்ளிகளுக்கு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் 3 மாத காலத்திற்கு கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது என கூறியுள்ளார். இதனை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் ஒரு சில தனியார் பள்ளிகள் நான்காம் பருவ கல்வி கட்டணத்தை பெற்றோர்களை கட்ட நிர்ப் பந்திப்பது தெரிய வருகிறது.
மேலும் கடந்த மூன்று மாதங்களாக இயக்கப்படாத பேருந்துகளின் கட்டணத் தையும் கட்டச்சொல்லி பெற்றோர்களை கட்டாயப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அக்பர்அலி தலைமையில் தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப் பட்டது. இருப்பினும் கல்வி கட்டண நிர்ணயக்குழுவால் நிர்ணயிக்கப் பட்ட கட்டணங்களை வசூலிக்காமல் கூடுதலாகவே வசூலித்து வந்தனர். ஆகவே தற்போதைய அசாதாரண சூழலில் தங்கள் வருமானம், வாழ்வாதாரம் இழந்து நெருக்கடியில் உள்ள மக்களிடம் கல்வி கட்டணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல.எனவே, புதுச்சேரி கல்வித்துறை உடனடியாக கல்வி கட்டணம் கட்டச்சொல்லி நிர்ப்பந்திக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும். கல்வி கட்டணம் கட்டச் சொல்லி நிர்ப்பந்திக்கும் தனியார் பள்ளிகள் குறித்து பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் புகார் அளிக்கும் வகையில் புதுச்சேரி கல்வித்துறை ஹெல்ப் லைன் எண்களை (உதவி மையம்) வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.