tamilnadu

img

அஸ்ஸாமில் தேசியக் குடிமக்கள் பதிவேடு அனைவருக்கும் நீதி உத்தரவாதப்படுத்திடுக

புதுதில்லி, செப். 12-

அஸ்ஸாமில் தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் அனைவருக்கும் நீதி உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் கோரியுள்ளன.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா,  இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) கட்சியின் பொதுச் செயலாளர், திபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர், தேவ பிரத பிஸ்வாஸ், மற்றும் புரட்சி சோசலிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர், கிஸ்ட்டி கோஸ்வாமி (Kshiti Goswami), ஆகியோர் கூட்டாக இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அஸ்ஸாமில் தேசியக் குடிமக்கள் பதிவேடு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இறுதிப் பட்டியலில், விண்ணப்பித்திருந்தவர்களில் 19 லட்சத்து 6 ஆயிரம் பேர் விடுபட்டிருக்கிறார்கள். இவர்களில் இந்தியக் குடிமக்கள் ஏராளமான எண்ணிக்கையில் விடுபட்டிருப்பதாகப் பூர்வாங்க ஆய்வறிக்கைகள் காட்டுகின்றன.

எனவே, இவ்வாறு விடுபட்டவர்கள் சமர்ப்பித்திடும் மேல்முறையீடுகள் நேர்மையானமுறையில் கேட்கப்பட்டு தீர்மானிக்கப்படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டியது அவசியமாகும். இதற்காக இப்போது ஏற்படுத்தப்பட்டுள்ள நடைமுறை என்பது, இவ்வாறு பெயர்கள் விடுபட்டவர்கள் 120 நாட்களுக்குள் அவர்களுக்காக அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அந்நியர் நடுவர் மன்றத்தின் முன் மேல்முறையீடு செய்திட வேண்டும் என்பதாகும்.

அந்நியர் நடுவர் மன்றம் என்பது ஒரு நீதித்துறை அமைப்பு அல்ல. அதன் செயல்பாடுகள் கிட்டத்தட்ட அரசு நிர்வாக அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது. இப்போதுள்ள விதிகளின்படி, ஒரு மேல்முறையீட்டை விசாரணைக்காக அனுமதிக்கலாமா, கூடாதா என்பதை அனுமதிப்பதற்கு முன்பாகவே அதன் தகுதிப்பாடு (merit) குறித்து பரிசீலனை செய்திட வேண்டும். இவ்வாறு வடிகட்டுவது என்பது தேவையற்ற ஒன்று. ஒரு நியாயமான நடைமுறையை உத்தரவாதப்படுத்திடவும், விடுபட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாத்திடவும் ஒரு நீதித்துறை அமைப்பு மூலமாக மேல்முறையீடு கேட்கப்பட்டு, முடிவு எடுப்பது அவசியமாகும். நடுவர் மன்றத்திற்கும் மேலாக மேல்முறையீடுகளைக் கேட்பதற்கு நீதித்துறை சார்ந்த அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் கோருகின்றன.

நடுவர் மன்றங்களால் அந்நியர்கள் என்று அறிவிக்கப்படுபவர்கள், தடுப்புக் காவல் முகாம்களில் அடைத்திட வேண்டியவர்களாவார்கள். இவ்வாறு தடுப்புக் காவல் முகாம்களில் அடைக்கப்படுபவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் எதுவும் வழங்கப்படாது. இத்தகைய முகாம்களில் காலவரையற்ற காலத்திற்கு மக்களை அடைத்து வைப்பது என்பது சட்டவிரோதமாகும் மற்றும் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான செயலுமாகும். இவ்வாறான தடுப்புக்காவல் முகாம் முறையே ஒழிக்கப்பட வேண்டும் என்பதே இடதுசாரிக் கட்சிகளின் கோரிக்கையாகும்.

அஸ்ஸாமில் இயங்கும் பாஜக, தேசியக் குடிமக்கள் பதிவேடு மீளவும் சரிபார்க்கப்பட வேண்டும் அல்லது புதிதாக தேசியக் குடிமக்கள் பதிவேட்டை மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக் கொண்டிருக்கிறது. இவர்களின் கோரிக்கையின் நோக்கம், தங்கள் கட்சியின் மதவெறி மற்றும் பிளவுவாத நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனேயே முன்வைக்கப்பட்டிருப்பதால் இதனைச் செய்திடக் கூடாது. அஸ்ஸாம் மாநிலத்தில் மத நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்றும், குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டவர்களைக் குறிவைத்துத் தாக்குதல் தொடுத்திட அனுமதித்திடக் கூடாது என்றும் அஸ்ஸாம் மக்களிடம் இடதுசாரிக் கட்சிகள் கோருகின்றன.

பாஜக அரசாங்கம், தேசியக் குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுதும் விரிவுபடுத்துவது பற்றி பேசிக்கொண்டிருக்கிறது. இது வேண்டாத வேலை. மக்களின் ஒருகுறிப்பிட்ட பகுதியினரைக் குறி வைத்தும், மக்களிடையே மத மோதலை உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்துடனும் இதனைச் செய்திட விரும்புகிறார்கள். இடதுசாரிக் கட்சிகள், குடிமக்கள் பதிவேடு  நடைமுறையை, நாட்டின் இதர பகுதிகளுக்கு எந்த வடிவத்தில் கொண்டுவந்தாலும் அதனை எதிர்த்திடும்.

இவ்வாறு இடதுசாரிக் கட்சிகள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளன.

(ந.நி.)