இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு கொண்டாடும்போது பிரிட்டிஷ்காரர்கள் உண்டாக்கிய எல்லைகளின் பேரில் அசாம், மிசோரம் மாநிலங்கள் எதிரி மாநிலங்களைப் போல் மோதுகின்றன. ஜூலை 26 அன்று ஆறு அசாம் போலீஸ்காரர்களை மிசோரம் போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. இது அந்தப் பிரதேசத்தின் மோசமான நிலைமையைக் காட்டுகிறது. இயந்திரத் துப்பாக்கியைப் பயன்படுத்தி சுட்டதில் அசாம் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் உள்பட காக்கி உடையணிந்த அறுநூறு பேர் வரை காயமடைந்தனர்.
மேகாலயாவிலும் கலவரம் பரவுகிறது. தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பாகிய எச்என்எல்ஸி-யின் தலைவர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. முதலமைச்சர் கொன்ராடு சங்க்மாவின் வசிப்பிடம் தாக்கப்பட்டது. தலைநகரம் ஷில்லாங்கில் ஒரு வாரமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நான்கு மாவட்டங்களில் மொபைல், இண்டர்நெட் சேவை ரத்துசெய்யப்பட்டது. மாநிலத்தின் உள்துறை அமைச்சர் தன் பதவியை ராஜினாமா செய்தார்.
பிரச்சனையைத் தீர்க்க முடியாத இரண்டு கட்சிகள்
சுதந்திர இந்தியாவை நீண்ட காலம் ஆட்சிசெய்த காங்கிரசாலும், இரண்டாம் முறையாகவும் ஆட்சியில் உள்ள பாஜகவாலும் வடகிழக்கு மாநிலங்களுக்கிடையேயான எல்லைப் பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை. அசாமையும் மிசோரமையும் மேகாலயாவையும் இப்போது ஆட்சிசெய்வது பாஜக கூட்டணியின் (என்டிஏ-வின்) வடகிழக்கு வடிவமாகிய என்இடிஏ (நார்த் ஈஸ்ட் டெமாக்ரடிக் அலயன்ஸ்) ஆகும். பாஜகவின் தீவிர இந்துத்துவ முகமாகிய அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா என்இடிஏ-வின் நிறுவன கன்வீனராவார். கூட்டணிக் கட்சியாகிய மிசோ நேஷனல் ஃப்ரண்டின் (எம்என்எஃப்) தலைவராக உள்ளவர் மிசோரம் முதலமைச்சர் சோரம் தாங்கா. என்இடிஏ-வின் தலைவராக உள்ளவர் மேகாலயா முதலமைச்சர் சங்மா.
அசாம்-மிசோரம் எல்லையில் போலீஸ்காரர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, இந்த இரு மாநிலங்களின் முதலமைச்சர்கள் டிவிட்டரில் கோபத்துடன் பதிவிட்டுக் கொண்டிருந்தனர். மிசோரம்-க்கு எதிராக அசாமின் பொருளாதாரத் தடை தொடர்கிறது. அத்தியாவசியப் பொருள்களுடன் மிசோரம்-க்குச் செல்கிற டிரக்குகளை பராக் அடிவாரத்தில் அசாம்காரர்கள் தீயிட்டு எரித்தார்கள். தகர்க்கப்பட்ட ஒரே ரயில் பாதை மறுசீரமைக்கப்படவில்லை. ஒன்றிய அரசோ துணை இராணுவப் படையை அனுப்பிவைத்துவிட்டு மௌனவிரதம் இருக்கிறது.
பிரதமரோ, உள்துறை அமைச்சரோ கண்டிக்கவில்லை
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இரண்டு மாநிலங்களின் போலீஸ் படைகள் ஒரு யுத்தத்திற்குச் சமமாக மோதிக் கொண்டது இதுதான் முதன்முறை. பிரதமரோ, உள்துறை அமைச்சரோ ஒருமுறைகூட இதைக் கண்டிக்கவில்லை. தேசிய ஒருமைப்பாடு குழு கூட்டப்பட வேண்டுமென்கிற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கூட ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மிசோரமில் லுஷாய் பழங்குடியினப் பிரதேசங்களுக்கும், அசாமில் கச்சர் சமதளத்திற்குமிடையே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் 1875-லும், 1933-லும் ஏற்படுத்திய எல்லையின் பேரில்தான் இப்போது சர்ச்சை தொடர்கிறது. 1972-ல் யூனியன் பிரதேசமாக இருந்து பின்னர் 1987-ல் மிசோரம் மாநிலமாக ஆனபோதிலும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வரையறுத்த எல்லையே தொடர்கிறது. 1875 ஆம் ஆண்டின் எல்லையை மிசோரம் அங்கீகரிக்கும்போது 1933 ல் வரையறுத்த எல்லையில் தான் அசாம் விருப்பம் தெரிவித்தது. ஏற்கெனவே தங்களின் பகுதியாகிய மேகாலயாவுடனும் நாகலாந்துடனும் அசாம் எல்லைப் பிரச்சனையில் உள்ளது. சமதளத்தில் வசிக்கும் மக்களுக்கும் மலைவாழ் மக்களுக்குமிடையேயான மோதல்களாகவே இது முடிகிறது.
220 வம்சங்கள்
வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் இந்த மோதல்கள் உண்டு. சமதளத்தில் உள்ளவர்கள் நீதி நியாயத்தை மறுக்கிறார்கள் என்ற எண்ணம் மலையில் வசிக்கும் பழங்குடியின மக்களிடையே வலுவாக உள்ளது. மிசோரம்-க்கு எதிராக இப்போது அசாம் நடைமுறைப்படுத்துகிற அறிவிக்கப்படாத தடையை பழங்குடியின மக்கள் காலங்காலமாக அனுபவித்து வருகிறார்கள். ஸப்த சகோதரிகள் (ஏழு சகோதரிகள்) என்று அறியப்படுகிற மாநிலங்களிலும் சிக்கிமிலுமாக அதிகாரப்பூர்வ கணக்குப்படி 220 வம்சத்தினர் உள்ளனர். இவர்களில் 145 பிரிவினர் பழங்குடியின மக்களாவர். இவர்கள் எல்லைகளை உயர்வாகக் கருதுபவர்கள்.
சீனா, மியான்மர், வங்கதேசம், நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளால் சூழப்பட்டுள்ள இங்கு இந்தியாவின் மையப் பகுதியிலிருந்து தரைவழிப் போக்குவரத்து குறைவாகும். சமதளத்தில் உள்ள அசாமையும் வங்கத்தையும் இயற்கையாகவே சார்ந்துதான் இவர்களின் வாழ்க்கை உள்ளது. இப்பகுதிகளில் இன உணர்ச்சி எளிதாகத் தீவிரவாதத்திற்கு இட்டுச்செல்கிற சூழல் உள்ளது. இவற்றுள் பெரும்பாலான மாநிலங்களிலும் ஆயுதம் ஏந்திய ஒன்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதக் குழுக்கள் தீவிரமாக உள்ளன.இவற்றுக்கு பிரதேச அளவிலான அரசியல் வடிவமும் உண்டு.
பாஜகவின் முக்கிய தேர்தல் நிகழ்ச்சி நிரல்
இவற்றையெல்லாம் ஒன்றுசேர்த்து வடகிழக்கில் ஆட்சியைப் பிடிப்பது என்கிற சூழ்ச்சியுடன் 2016-ல் பாஜக என்இடிஏ-வை உருவாக்கியது. 2019-க்குள் இந்த எல்லா மாநிலங்களையும் பிடித்து இவர்கள் வெற்றி கண்டனர். வங்கதேசத்திலிருந்து வந்து குடியேறிய முஸ்லிம்களால்தான் இந்தப் பிரதேசத்தில் குழப்பத்திற்குக் காரணம் என்கிற மதவெறி தூண்டுதலாக இருந்தது பாஜக-வின் முக்கிய தேர்தல் பிரச்சாரம். பல்வேறு பழங்குடியின மக்கள் பிரிவினரை அவர்களுக்குள் மோதிக் கொள்ளவும் வைத்தனர். இதன் விளைவுதான் அசாம் - மிசோரம் எல்லையில் ஆரம்பித்து அந்தப் பிரதேசம் முழுவதும் பரவுகிற தனித்தனிக் குழுக்கள். இந்தியாவிலிருந்து பிரிந்து செல்ல வேண்டுமென்று வாதிடுகிற மேகாலயாவில் உள்ள எச்என்எல்சி என்கிற அமைப்பு அசாம் சமதள மக்களை விதேசிகள் (அந்நியர்கள்) என்று கருதுகிறது.
‘அகண்ட பாரதம்’ பற்றி ஓயாமல் பேசுகிற பாஜக, எல்லையோர மாநிலங்களில்கூட பிரிவினைவாத இயக்கங்களை ஊக்கப்படுத்துகிறது. சிறிய மாநிலமாகிய திரிபுராவைப் பிரிவினை செய்ய வேண்டுமென்று வாதிடுகிற பயங்கரவாத அமைப்பாகிய ஐபிஎஃப்டி (திரிபுரா பழங்குடியின மக்கள் முன்னணி) பாஜக-வின் கூட்டுக் கட்சி என்பது இதற்கு ஓர் உதாரணம். நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்ட் ஊழியர்களின் உயிர்களைப் பறித்த பயங்கரவாதத்தைத் தடுத்த திரிபுரா, மீண்டும் அதே தீவிரவாத கொடுமையில் சிக்கியுள்ளது.
இந்துத்துவ தேசியம் என்பது பாசிசத்திற்கான படிக்கல்; அதற்கு முழு இந்தியாவுடன் எந்த இரத்த உறவும் இல்லையென்பதை சுதந்திர இந்தியா பல சந்தர்ப்பங்களிலும் பார்த்துள்ளது. இதோ, இப்போது வடகிழக்கின் அமைதியின்மை அதற்கு அடிக்கோடிட்டுள்ளது.
நன்றி: தேசாபிமானி நாளிதழ் (18.8.2021)
தமிழில்: தி.வரதராசன்