புதுதில்லி:
சர்வதேச சிறப்பு விமானங்களில் ஜூன் 6-க்கு பிறகு நடு இருக்கைகளை காலியாக வைத்து இயக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் தவித்த இந்தியர்கள், வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.
வெளிநாட்டு வாழ் இந்தியர்களை அழைத்து வரும் போது கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏர் இந்தியா நிறுவனம் பின்பற்றவில்லை என விமானி தேவன் கனானி என்பவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், நடு இருக்கை டிக்கெட்டுகளை விற்பனை செய்வதற்கு எதிராக உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, உடனடியாக ஏர் இந்தியா மற்றும் மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர முறையீடாக முறையிடப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஜூன் 6 ஆம் தேதி வரை டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக மத்திய அரசுதரப்பில் ஆஜரான சொலிசிச்சர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார். இதையடுத்து, ஜூன் 6 ஆம் தேதிக்கு பிறகு நடு இருக்கைகளை காலியாக வைத்துதான் விமானங்களை இயக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.