இந்தியாவில் கல்வியின் தரம்குறித்து, ‘நிதி ஆயோக்’ அமைப்பு,சர்வே ஒன்றை நடத்தி அதன்முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வியின் தரம் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாதது, பள்ளிகளில் போதிய வசதிகள் இல்லாதது ஆகியவையே இதற்கு முக்கியக் காரணம் என்றும் கூறியுள்ளது. “ஐம்பதுக்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் மட்டும் 4 லட்சம் என்ற எண்ணிக் கையில் இருக்கின்றன. இதுபோன்ற பள்ளிகளில் 2 ஆசிரியர்களே பணிபுரிகின்றனர். ஒன்றரைக் கோடி மாணவர்கள் அடிப்படை வசதிகள் மற்றும் சரியான நிர்வாகமில்லாத பள்ளிகளில் பயில்கின்றனர்; மத்தியப்பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான்,ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் கிராமப்பகுதிகளில் 100 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் எனும் நிலையே உள்ளது. இதனால் கல்வியின் தரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது” என்று சர்வேயில் குறிப்பிடப்பட்டு உள்ளது. “மக்கட் தொகை அடிப்படையில், சீனாவோடு ஒப்பிட்டுப்பார்க்கையில், பள்ளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துள்ளது; ஆனால் தரமான கல்வி வழங்கப்படுகிறதா, என்றால்? இல்லை” என்றும் ‘நிதி ஆயோக்’ சர்வே தெரிவித்துள்ளது.