புதுதில்லி, ஏப்.23 -ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்குப் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த முடிவினை இந்தியா ஏற்கக்கூடாது என்றும் ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதனை இந்திய அரசு தொடர்ந்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கும் எந்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அரசாங்கம்எடுத்திருக்கிற முடிவினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கண்டனம் செய்கிறது. இது தொடர்பாக இந்தியா உட்பட சில நாடுகளுக்கு அளித்திருந்த தளர்வினை நீட்டிக்க முடியாது என்றும் டிரம்ப் நிர்வாகம் தீர்மானித்திருக்கிறது.ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திடுவதற்காக மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கையும் இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் தேச நலன்களுக்கு ஊறு விளைவித்திடும். முன்னதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஐ.நா. ஸ்தாபனம் விதிக்கும் பொருளாதாரத் தடையைத் தவிர வேறெந்த நாடு பொருளாதாரத் தடை விதிக்கும் அதற்கு இந்தியாகட்டுப்படாது என்று கூறியிருந்தார்.இத்தகைய சட்டவிரோத பொருளா தாரத் தடைகளை அமெரிக்கா ஒருதலைப் பட்சமாக திணித்திருப்பதால், பாஜக தலைமையிலான அரசாங்கம் இதனை நிராகரித்திட வேண்டும், நாட்டின் நலன் கருதி தொடர்ந்து ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடர வேண்டும்.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது. (ந.நி.)