புதுதில்லி:
இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உட்பட 49 பிரபலங்கள் மீதுதேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு, இந்திய கலாச்சார சமூகம் (Indian Cultural Community) அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கத்தை ஆயுதமாக்கி, சிறுபான்மையினர் துன்புறுத்தப்படும் சம்பவங்களைத் தடுத்து நிறுத்துங்கள் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதற்காக, திரைப்பட இயக்குநர்கள் அடூர் கோபாலகிருஷ்ணன், மணி ரத்னம், அனுராக் காஷ்யப், ஷியாம் பெனகல், நடிகை சுமித்ரா சாட்டர்ஜி, சுபாமுத்கல், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது பீகார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் தேசத்துரோகம், பொது அமைதியைக் குலைத்தல், மத உணர்வைப் புண்படுத்துதல் உள்ளிட்ட பல கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில், இந்திய கலாச்சார சமூகம் அமைப்பும்,தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு அந்த அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில், “நம் நாட்டில் நடக்கும் கும்பல்வன்முறைக்கு எதிராக பொறுப்புள்ள குடிமகன்களாக குரல் எழுப்பிய, எங்கள் கலைத்துறையைச் சேர்ந்த49 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய் யப்பட்டுள்ளது. இது நீதிமன்றத்தைத் தவறாகப் பயன்படுத்தி, குடிமக்களின் குரல்வளையை நெறிக்கும்செயலாகும்; இதை நாங்கள் கண்டிக்கிறோம்.” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.“நாட்டில் உள்ள பிரச்சனைகளை கூறி, அதன்மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதுவது தேசத்துரோகமா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ள கலாச்சார அமைப்பு, “வழக்கை ரத்து செய்யாவிட்டால் இதுபோன்ற குரல்கள் பகிரங்கமாக கிளம்பும்” எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர், எழுத்தாளர் அசோக் வாஜ்பாய், பாலிவுட் நடிகர் நசிருதீன் ஷா, சினிமா ஒளிப்பதிவாளர் ஆனந்த் பிரதான், கல்வியாளர் இரா.பாஸ்கர், இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உட்பட 185 அறிவுஜீவிகள் இந்த புதிய கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.