புதுதில்லி:
குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக பிரதமர் மோடி தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று விமர்சகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க தயாரா? என்று, மத்திய முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக, ப. சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது:
“குடியுரிமையை வழங்குவதற்காகவே குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அச்சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என்கிறார் பிரதமர். ஆனால், அச்சட்டம், தங்களை குடிமக்கள் இல்லை என அறிவித்து விடும் எனவும், தங்கள் குடியுரிமையை பறித்துவிடும் எனவும் பலர் நம்புகின்றனர். இந்த சூழலில், இந்த விவகாரத்திற்கு ஒரு வழியில் மட்டும்தான் தீர்வு காண முடியும். மோடி தன்னை வெளிப்படையாக விமர்சனம் செய்யும் 5 விமர்சகர்களை அழைத்து, அவர்களுடன் ஒரு கேள்வி - பதில் விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டும். அது, தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யும்பட்சத்தில், மோடி பேசுவதைக் கேட்டு, குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்றால் என்னவென்று, மக்களே முடிவெடுத்துக் கொள்ளட்டும்” என்று ப. சிதம்பரம் கூறியுள்ளார்.தனது இந்த பரிந்துரைக்கு, பிரதமர் மோடி சாதகமான பதிலை வழங்குவார் என ஆவலுடன் எதிர்பார்ப்பதாக, குறிப்பிட்டுள்ள சிதம்பரம், “கேள்விகள் கேட்க முடியாத அமைதியான மக்களிடம் மட்டுமே உயர்தளங்களில் இருந்து மோடி பேசுகிறார்; அவர் விமர்சகர்களுடன் பேசுவதில்லை; அவருடன் பேசுவதற்கு விமர்சகர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை” என்றும் சாடியுள்ளார்.