புதுதில்லி:
2008-ஆம் ஆண்டு மாலேகானில் மசூதி அருகே நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில், 6 பேர் கொல்லப்பட்டனர். இந்துத்துவ பயங்கரவாதம் என்று அழைக்கப்பட்ட இந்த சம்பவத்தில், பெண் சாமியாரிணியான பிரக்யா சிங் தாக்குர், ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டு, நீண்ட காலமாக ஜாமீன் வழங்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபின்னணியில், பிரக்யா சிங் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 2019 மக்களவைத் தேர்தலில் போபால் தொகுதியில் பாஜகசார்பில் எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
பிரக்யா சிங் தாக்குர் மீது சட்டவிரோதநடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், ஆயுதங்கள் மற்றும் வெடிக்கும் பொருட்கள் சட்டம் தொடர்புடைய வழக்குகள் தற்போதும் நிலுவையில் உள்ளன.இந்நிலையில், ராஜ்நாத் சிங் தலைமையிலான 21 உறுப்பினர்களை கொண்ட பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் பிரக்யா சிங்தாக்கூரையும் சேர்த்து, மத்திய பாஜக அரசு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரக்யாசிங்கிற்கு வழங்கப்பட்டுள்ள பதவிக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.மும்பை பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைவராக இருந்த ஹேமந்த் கார்கரேஎன்ற காவல்துறை அதிகாரி, பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் கடந்த 2008 ஆம் ஆண்டு வீரமரணம் அடைந்தார்.நாட்டிற்காக செய்யப்பட்ட அந்த உயிர்த்தியாகத்தை, “தன்னைக் கைது செய்ததால்தான் கார்கரே வாழ்க்கை அற்ப ஆயுளில் முடிந்து விட்டது” என்று 2019 தேர்தலில் அவமதிப்பு செய்தவர்தான் பிரக்யா சிங்.அதுமட்டுமல்ல, காந்தியைப் படுகொலைசெய்த கோட்சேவை தேசபக்தர் என்றும்தொடர்ந்து பேசி வருபவர். அப்படிப்பட்டவரை பாதுகாப்புத்துறையில் பதவியில் அமர்த்தியிருப்பது, நாட்டிற்கே அவமானம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.