புதுதில்லி:
புதுதில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஸ்வராஜ் இந்தியா கட்சித் தலைவர் யோகேந்திர யாதவ் ஆகியோருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை தில்லி நீதிமன்றம் ரத்து செய்தது.
அவதூறு வழக்கில், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி முன்னாள் தலைவரும், ஸ்வராஜ் இந்தியா கட்சியின் தலைவருமான யோகேந்திர யாதவ் ஆகியோருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடியாணையை, தில்லி நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை பிறப்பித்தது. இந்த வழக்கில், மேற்கண்ட மூவரும் நேரில் ஆஜராகாததைத் தொடர்ந்து, கூடுதல் தலைமை பெருநகர நடுவர் நீதிமன்றம் இந்த பிடியாணை பிறப்பித்தது.
இதைத்தொடர்ந்து, கடந்த புதன்கிழமை நடைபெற்ற அடுத்த கட்ட விசாரணையின் போது, அவர்களுக்கு எதிராகபிறப்பிக்கப்பட்ட பிணையில் வெளிவர முடியாத பிடியாணையை தில்லி நீதிமன்றம் நிறுத்திவைத்தது. மேலும்,இதுதொடர்பான பிரதான வழக்கை ஏப்ரல் 29-ம் தேதி விசாரிப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.இந்த நிலையில் இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கெஜ்ரிவால் உள்ளிட்டவர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு தடை விதிக்குமாறு கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கைவைத்தார்.
இதையடுத்து, இந்த தவறை அவர்கள் மீண்டும் செய்யக்கூடாது என்று எச்சரித்த நீதிபதி சமர் விஷால், அவர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை ரத்து செய்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை மே 14-ம் தேதி விசாரிப்பதாகவும் நீதிபதி சமர் விஷால்
தெரிவித்தார்.