சில தளர்வுகளும் அறிவிப்பு
புதுதில்லி, மே 30- கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் ஊரடங்கு ஜூன் 30 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிற இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கின் நான்காவது கட்டம் மே 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. கட்டுப்பாட்டு மண்டலங்களில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படும். புதிய வழிகாட்டுதல்கள் குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசு விரிவான ஆலோசனை நடத்தியது. உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை முதல்வர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் பிரதமர் மோடியை சந்தித்து, பல்வேறு முதல்வர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை விவரித்தார். இந்த நிலையில் மத்திய அரசு ஐந்தாம் கட்ட ஊரடங்கை அறிவித்துள்ளது.
உணவகங்கள், பிற விருந்தோம்பல் நிகழ்வுகள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஜூன் 8- ஆம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு தனது உத்தரவில் கூறியுள்ளது. மாநிலங்களுடன் ஆலோசனை இரண்டாம் கட்டமாக, பள்ளிகள், கல்லூரிகள் போன்றவை திறக்கப்படும். இது தொடர்பாக பெற்றோர்கள் சம்பந்த கல்வி நிறுவனங்கள், கல்வித்துறையுடன் ஆலோசனை நடத்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடு தொடர்கிறது. பொது இடங்களில் மது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது. சூழ்நிலைக்கேற்ப தியேட்டர், உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பது குறித்து மாநில அளவில் முடிவு செய்யலாம்.
பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடைகளில் ஐந்து நபருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவது தடை செய்யப்படுகிறது. சிறப்பு ரயில்கள், பயணிகள் ரயில்கள், உள்நாட்டு விமான சேவை, வெளிநாட்டு விமான சேவை ஆகியவை கட்டுப்பாடுகளுடன் தொடரும். இரவு ஒன்பது மணி முதல் காலை ஐந்து மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட நிர்வாகமே முடிவு செய்யலாம். மாநிலங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் சரக்கு வாகனங்களை இயங்கத் தடை இல்லை. மத்திய அரசு தனது நிலையை அறிவித்துவிட்ட நிலையில் தமிழக அரசு ஐந்தாம் கட்ட ஊராடங்கு குறித்து முழுமையாக அறிவிப்பை இன்று வெளியிடும் எதிர்பார்க்கப்படுகிறது.