புதுதில்லி, மார்ச் 2- சமூகங்களுக்கு இடையே துவேஷத்தை தூண்டும் பேச்சுக்களால் ஏற்படும் வன்முறையை தடுக்கும் நிலைமையில் நீதிமன்றங்கள் இல்லை என, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்திருக்கிறார். தில்லி கலவரத்தின் பின்னணியில், வன்முறையைத் தூண்டும் அரசியல்வாதிகள் மீது உடனடியாக எப்.ஐ.ஆர். பதிய உத்தரவிடுமாறு கோரி தாக்கலான மனுவை விசாரணைக்கு ஏற்ற நிலையில், தலைமை நீதிபதி இவ்வாறு கூறி இருக்கிறார். வன்முறையைத் தூண்டும் பேச்சுக்களால் கலகம் வெடிப்பதை ஊடகங்கள் வாயிலாக நீதிமன்றங்கள் அறிந்து கொள்கின்றன என்ற அவர், அவை நடந்து முடிந்த பின்னர் தலையிடும் அதிகாரம் மட்டுமே தங்களுக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக வழக்கறிஞர் கோலின் கோன்சால்வெஸ்ஸின் வாதத்தை கேட்ட நீதிபதி, பத்திரிகைகள் தங்களை குற்றஞ்சாட்டும் வகையில் செய்தி வெளியிடுவதாக வேதனை தெரிவித்தார். மதக்கலவரங்களில் மக்கள் பலியாக வேண்டும் என தாங்கள் விரும்புவதில்லை என்ற அவர் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்பினாலும் வன்முறையைத் தடுக்க தங்களால் இயலாது என்றும் கூறினார்.