புதுதில்லி:
கொரோனாவால் குணமடைந்தவரின் ரத்தத்தை, பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தலாம் என தில்லி எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பல்வேறு சிகிச்சை முயற்சிகள் சோதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பிளாஸ்மா சிகிச்சை முறையைப் பயன்படுத்த உலக நாடுகள் தயாராகி கொண்டிருக்கின்றன. கேரளாவிலும் இந்தச் சிகிச்சைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதியளித்திருந்தது.
இது குறித்து தில்லி எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா என்டிடிவி-க்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-மாற்று பிளாஸ்மா என்பது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்ட நோயாளி குணமடைந்துவிட்டால், அவரது உடல், தொற்றுநோயை எதிர்த்து போரிடும் நிலையில் இருக்கும்.தொற்றுநோயை எதிர்த்துப் போராட, உடல் ரத்தத்தில் ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. குணப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளின் ரத்தத்தை பிற வைரஸ் பாதித்த நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுத்தலாம். கொரோனா வைரஸிலிருந்து மீண்ட ஒரு நபருக்கு இந்த ஆன்டிபாடிகள் அதிக அளவு இருப்பது கண்டறியப்பட்டால், அவருடைய ரத்தத்தை தானம் செய்யும்படி நாம் அவரிடம் கேட்கலாம்.
எபோலா போன்ற வைரஸ்களை சமாளிக்க பிளாஸ்மா சிகிச்சை பயன்படுத்தப்பட்டது. பிளாஸ்மா சிகிச்சையளிக்க பல்வேறு மருத்துவமனைகள் முயற்சிக்கின்றன. இந்த சிகிச்சை பயனுள்ளதுதான் என்பது நிரூபணமானால் எதிர்காலத்தில் இதைப் பயன்படுத்துவோம்.
தொழில்நுட்ப ரீதியாக கான்வெலசென்ட்-பிளாஸ்மா சிகிச்சை என்றழைக்கப்படும் இந்த சிகிச்சை, கொரோனா தொற்றிலிருந்து மீட்கப்பட்ட ஒருவரிடமிருந்து பெறப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை நோயுற்ற ஒருவருக்கு பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாவல் சிகிச்சையை மேற்கொள்வதற்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கேரளாவின் ஸ்ரீ சித்ரா திருனல் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (எஸ்.சி.டி.எம்.எஸ்.டி) இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு ரன்தீப் குலேரியா கூறினார்.