தில்லி
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலை யில், 1,079 பேர் பலியாகியுள்ளனர். நாட்டில் கொரோனா பரவல் மூன்றாம் நிலைக்கு மாறும் நிலையில், பெரும்பாலான மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. பஞ்சாப் மாநிலம் ஒருபடி மேலே சென்று ஊரடங்கை 2 வாரத்திற்கு நீட்டித்தது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தோர் விகிதம் 25%ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது," இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,718 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 33,050 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நாட்டில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 25.19 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கடந்த 14 தினங்களுக்கு முன்பு 13.06 சதவிகிதமாக இருந்தது. கொரோனா பாதிப்பு இருமடங்காகும் நாள் 11 நாள்களாக உயர்ந்துள்ளது” என்றார்.