புதுதில்லி:
மோடி அமைச்சரவையில் மத்திய இணை அமைச்சராக இருந்த பத்திரிகையாளர் எம்.ஜே. அக்பர் மீது ஏராளமான பெண்கள் பாலியல் புகார் கூறினர். வழக்கும் தொடர்ந்தனர். இதனால் எம்.ஜே. அக்பர்தனது அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டது.பத்திரிகை துறையைத் தொடர்ந்து,சினிமா, அரசியல், கலை, இலக்கியத்துறைகளில் இருக்கும் பெண்களும்,பணியிடங்களில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை, #MeToo (நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன்) என்ற சொற்றொடர் மூலம் பெரும் இயக்கமாக முன்னெடுத்தனர். சமூகத்தில் பெரிய மனிதர்கள் போர்வையில் வலம்வந்த பலர், பெண்களின் ‘மீ டூ’ இயக்கத்தால் அம்பலப்பட்டனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற் படுத்தியது.
இதையடுத்து, “நாட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்” என்று தெரிவித்த பிரதமர் மோடி, இதுதொடர்பாக, மத்திய அமைச்சர்கள் குழு ஒன்றை அமைத்தார். ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்த குழுவில், நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன்,மேனகா காந்தி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.பணியிடங்களில் பெண்களுக்குநிகழும் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து, அவர்களை பாதுகாப்பதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை இந்தக் குழு வகுப்பதோடு, இதுதொடர்பான சட்டத்தை மேலும் வலுவுள்ளதாக மாற்றுவதற்கான பரிந்துரைகளையும் வழங்கும்என்று மோடி அப்போது கூறினார்.
ஆனால், 2018 அக்டோபரில் அமைக்கப்பட்ட இந்த குழு, கடந்த ஓராண்டில் எத்தனை முறை கூடியது; பெண்கள் பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதெல்லாம் மோடி அரசுக்குத்தான் தெரியும். எனினும் பெயரளவில் ஒரு குழு இருந்தது.இந்நிலையில்தான், இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பிற்கு வந் துள்ள பிரதமர் மோடி, பெண்கள் பாதுகாப்புக்கான வழிகாட்டுதல் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள்குழுவை, சத்தமே இல்லாமல் கலைத் துள்ளார்.இந்தக் குழு தொடர்பாக, இணையதள ஊடகமான ‘தி குவிண்ட்’, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கேள்விஎழுப்பியிருந்தது. அதற்கு ‘அந்தக் குழுகலைக்கப்பட்டு விட்டது’ என்று பதில் கிடைத்துள்ளது. அமைக்கப்பட்ட நாளிலிருந்து எத்தனை முறை அமைச்சர்கள்குழு கூடியது; அந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன? என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்த நிலையில், இதற்கான பதில்கள், ஆர்.டி.ஐ. சட்டப் பிரிவு 8 (i)ன் படி பகிர்ந்துகொள் ளத் தக்கவை அல்ல என்றும் மோடி அரசு மழுப்பியுள்ளது.