புதுதில்லி:
தில்லி – மீரட் இடையிலான ஆர்ஆர்டிஎஸ் வழித்தடத்தில், நியூ அசோக்நகர் மற்றும் சாஹிபாபாத் இடையிலான 5.6 கி.மீ. தூரத்திற்கு சுரங்க ரயில்பாதை அமைக்கும் காண்ட்ராக்ட்டை சீன நிறுவனம் பெற்றுள்ளது.
தேசிய தலைநகரப் பிராந்திய போக்குவரத்துக் கழக நிறுமமானது (என்சிஆர்டிசி), தில்லி – மீரட் வழித்தடத்தில் நியூ அசோக் நகர் மற்றும் சாஹிபாபாத் இடையே சுரங்கவழித்தடம் அமைக்கும் பணிக்கு, கட்டுமானநிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப் புள்ளிகளை கோரியிருந்தது.மொத்தம் 5 உள்நாட்டு மற்றும் பன்னாட்டுகட்டுமான நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றன. இவற்றில் லார்சன் & டூப்ரோ லிமிடெட்(எல் அண்ட் டி) நிறுவனம் ரூ. 1170 கோடி, குலேர்மாக் கனரக தொழில் நிறுவனம் ரூ.1326 கோடி, டாடா திட்டக்குழுமம் (எஸ்.கே.இ.சி ஜே.வி) ரூ. 1346 கோடி,ஆஃப்கான்ஸ் உள்கட்டமைப்பு நிறுவனம் ரூ. 1400 கோடி என ஏலத் தொகையை குறிப்பிட்டிருந்தன. ஆனால், இந்த தொகைகளைக் காட்டிலும், சீன நிறுவனமான ஷாங்காய் டன்னல் இன்ஜினியரிங் கோ.லிமிடெட் (எஸ்டிஇசி), குறைந்த தொகையை (ரூ. 1126 கோடி ) இறுதி செய்து, தில்லிசுரங்க ரயில்பாதை ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.