புதுதில்லி:
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கேரள முன்மாதிரியை நாடு முழுவதும் அமல்படுத்த முயற்சிப்பதாக அறிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை கேரள சுகாதார நடவடிக்கைகளுக்கு மீ்ண்டும் பாராட்டு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு, தொடர்பை கண்டறிதல், நோய் தொற்றை அறியும் பரிசோதனை, சிகிச்சை போன்றவற்றில் கேரளம் மேற்கொண்ட நடவடிக்கைகள் அடிமட்டத்தில் நோய் பரவாமல் தடுப்பதில் பெரும் வெற்றி பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லவ் அகர்வால் கூறினார்.
நோயாளிகளின் விகிதம் இரட்டிப்பாவது கேரளம் உட்பட 19 மாநிலங்களிலும் மத்திய ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் தேசிய சராசரியைவிட குறைவாகும். கேரளத்தில் இரட்டிப்பாகும் சராசரி 20 நாட்களாகும். ஒரு வாரமாக தேசிய சராசரி இரட்டிப்பாகும் விகிதம் 6.2 நாட்களாக உள்ளது. ஊரடங்குக்கு முன்பு இது 3 நாட்களாக இருந்தது. கேரளம், உத்தரகண்ட், ஹரியானா, இமாச்சல், சண்டிகர் , புதுச்சேரி, அசாம், திரிபுரா, பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் நோய் இரட்டிப்பாகும் விகிதம் குறைந்துள்ளது. தில்லி, உத்தரபிரதேசம், தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தேசிய சராசரியைவிட குறைவு எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.