tamilnadu

img

தேவை குஜராத் மாடல் அல்ல, கேரள மாடல் - சேக் சம்சுதின்

புலம்பெயர் தொழிலாளர் குறித்த ஆராய்ச்சி மாணவர், கோவை.

கோவிட் 19 என்ற தொற்று உலகம் முழுவதும் அதன் கோர முகத்தை காட்டிக் கொண்டிருக்கிறது. வளர்ந்த நாடுகளே இதனை தடுக்க முடியாமல் விழி பிதுங்கி நிற்கின்ற காட்சிகளை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றன. ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரமே சரிவை நோக்கிச் செல்கின்றது. இதன்விளைவாக மக்களின் அத்தியாவசியப் பொருட்களின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த சூழலில் தற்போது இந்தியாவில் கோவிட் 19-ன் தாக்கும் உச்சம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க இந்தியாவில் புலம்பெயர்ந்த தொழிலாளிகளின் நிலையோ இன்னும் மோசமாக உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் (கேரளா நீங்கலாக) புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி எந்த ஒரு குறைந்தபட்ச புள்ளி விபரத்தை கூட பராமரிக்காத அலட்சியத்தின் விளைவாகவே தற்போது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்து வருவதை நாம் காண்கிறோம். 

புலம்பெயர்ந்தோரின் நெருக்கடி மற்றும் தீவிரமான கொடுமை வெட்ட வெளிச்சமாகி பொது ஆய்வுக்கு உட்பட்டுள்ளது. அவர்கள் கடுமையான பட்டினியில் கிடக்கும் போது கூட இந்திய உணவுக் கழகம் விரயமாகின்ற தானியங்களைகூட இந்த தொழிலாளர்களுக்கு வழங்க மறுக்கின்ற கொடுமை இந்தியாவில் நடக்கிறது. உணவு தானியங்களை ஏழைகளுக்கு கொடுப்பதை தடுக்க பல பொய்யான கணக்குகளை அள்ளி வீசிவருகின்றன. அதேபோல், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நெருக்கடியான நிலை பற்றி இந்தியாவில் உள்ள பல மாநில அரசுகள் ஒன்றுக்கொன்று முரணான பதில்களையே கூறி வருகின்றன. 

முன்னுதாரணமான கேரளா

கேரளா போன்ற மாநிலங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ”கெஸ்ட் வொர்க்கர்” (விருந்தாளி தொழிலாளர்கள்) என்று உயர்ந்த இடத்தில் வைத்து அழைக்கின்றனர். மேலும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சிறந்த முறையில் பாதுகாக்கும் வகையில் உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளபடி மனிதர்கள் வாழ்வதற்கு தகுந்தாற்போல் நிவாரண முகாம்கள், சமுதாய சமையலறைகள், தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி மற்றும் உணவு வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளது. மேலும் 2018 ஆண்டே “கேரளா இடம்பெயரும் தொழிலாளர்கள் நலத்திட்டம்” என்ற திட்டத்தை கேரளா அரசு துவங்கியுள்ளது. 18 வயது முதல் 60 வயது வரையுள்ள வெளி மாநில தொழிலாளர்கள் ஆண்டுக்கு ரூபாய் 30 மட்டும் ஆண்டுச் சந்தாவாக செலுத்தி இத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். 

இதன் மூலம் விபத்தில் மரணம் ஏற்பட்டால் ரூபாய் 50 ஆயிரமும், காயம் போன்ற சிகிச்சைக்கு ரூபாய் 25 ஆயிரமும், டெர்மினல் பெனிபிட் என்ற வகையில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையும், குழந்தைகளின் கல்விக்கு ரூபாய் ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் வெளிமாநில தொழிலாளர்கள் இறந்து போனால் அவர்களின் உடலை சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்ல ரூபாய் 5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும், பெண்களின் பிரசவ உதவிக்கு ரூ.15 ஆயிரம் வரை பலன்களை பெற முடியும். 

மேலும், இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் புலம் பெயர்ந்த அதாவது வெளிமாநில தொழிலாளர்கள் தங்குவதற்கு கேரளா அரசின் பாலம் பவுண்டேசன் அமைப்பு, சப்னா சர் திட்டதை அமலாக்கி வருகிறது. இதன் மூலம் பாலக்காடு மாவட்டத்தில் 640 படுக்கை அறைகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இத்திட்டத்தினை கேரளா முழுவதும் விரிவுபடுத்த கேரளா இடது ஜனநாயக முன்னணி அரசு தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. 

உலக அளவில் பொருளாதார தாக்கம் 

தற்போதை உலகப் பொருளாதார நெருக்கடி என்பது முந்தைய போர் மற்றும் இயற்கைச் சீற்றங்கள் நெருக்கடியில் இருந்து மாறுபட்டது. நோய்த்தொற்று பரவிய நாடுகள் அதன் காரணமாக பொருளாதார இழப்புகளை தினந்தோறும் சந்தித்துக் கொண்டு வருகின்றன. பயணக் கட்டுப்பாடுகள் முன்பைவிட அதிகமாக உள்ளது. இதன் மூலம் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அச்சம் உணர்வு மேலோங்கி உள்ளது. முக்கியமாக அத்தியாவசியப் பொருள்கள், சேவை மூலம் உற்பத்தித் துறையும் நேரடியாக அதிக பாதிப்புகளை கொண்டுள்ளது. உலக வர்த்தகத்தில் சங்கிலித் தொடர்புப் படி என்பது அறுந்து போய் உள்ளது. இது பொருளாதாரத்தில் எதிர்மறைவான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. உலக நாடுகளில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்வு, தொழிலாளர்களுக்கு கட்டாய விடுப்பு அல்லது பணி நீக்கம் போன்றவற்றால் பொருளாதாரம் பலவீனமடைகின்றது. அதாவது, உணவு மற்றும் மருத்துவப் பொருள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு கடுமையான கட்டுப்பாட்டுகள் வளர்ந்த நாடுகள் விதித்து வருகின்றன. மேலும் நாடுகளுக்குள் நிதிச் சுமை கூடுதல் அழுத்தத்தை தருகின்றன. 

இந்த நெருக்கடியான சூழல்நிலையில்தான் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தில் வேறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முறைசாரா தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு வறுமை மற்றும் ஏற்றதாழ்வுகள் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமாகியுள்ளது என்று பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) சுட்டிக்காட்டியுள்ளது. இப்படிப்பட்ட சமூக பதற்றங்களை தவிர்க்க சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன், சமூகப் பாதுகாப்பு, வேலையை உறுதி செய்து தொழிலாளர்களின் வருமானத்தை பெருக்க விரைவாக செயல்பட வேண்டும் என்று ஐஎல்ஓ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்திய நிலை 

இந்தியா முழுவதும் சுமார் 20 கோடி பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக இருக்கின்றனர். இதில் பலர் நிரந்தர குடியேறிகளாகவும் மாறியுள்ளனர். மீதம் உள்ள தொழிலாளர்களில் வெறும் சொற்ப அளவிலான தொழிலாளர்களே தற்போது தங்களது சொந்த ஊருக்கு செல்கின்றனர். இதனை பல வரலாற்று ஆசிரியர்கள் இந்திய- பாகிஸ்தான் பிரிவையொட்டி நடந்த நிகழ்வோடு ஒப்பிடுகின்றனர்.  முன்பு, எந்தவித முன்னேற்பாடுகளும் இன்றி எவ்வாறு பணமதிப்பிழப்பு அறிவிப்பை செய்தார்களோ அதேபோல் எந்த முன்னறிவிப்பும் இன்றி பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 24 ஆம் தேதியன்று இரவு 8 மணிக்கு இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு என உத்தரவிட்டதும் அனைத்து மாநில மற்றும் மாவட்ட எல்லைகளும் சீல் வைக்கப்பட்டன. மக்கள் பெரும் பீதியில் உறைந்தார்கள். பொது போக்குவரத்து உட்பட்ட அனைத்து போக்குவரத்துகளும் முடங்கின. இப்படியான அறிவிப்பு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களுடன் கூட குறைந்தபட்சம் ஆலோசனை செய்ததாக தெரியவில்லை.

அறிவிப்பு வேறு உண்மை நிலை

இதனால், இந்த ஊரடங்கின்போது அதிக பாதிப்புள்ளனவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களே, ஏற்கனவே முதலாளிகளால் சொற்பக் கூலி கொடுக்கப்பட்டு இவர்கள் அதிகமாக சுரண்டப்பட்டு வருகின்றனர். இப்படி ஊரடங்கின்போது இவர்களை பற்றி கொஞ்சமும் இந்த அரசு சிந்திக்க தவறியதன் விளைவையே அன்றாட செய்தித்தாள்களில், ஊடகங்களில் நாம் அவர்கள் படும் துயரத்தை பார்த்து வருகின்றோம். குறிப்பாக, அதிக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருக்கின்ற மாநிலங்களாக மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் அதற்கு அடுத்தபடியாக தென்னிந்தியாவில் தமிழகம் இருக்கிறது. இதில் மோடி ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில் அவர்களின் அவல நிலை இன்னும் மோசமானதாக உள்ளது. அம்மாநில முதலைமைச்சர் அனைத்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அவர்களின் வங்கிக் கணக்கில் ரூபாய் ஆயிரம் செலுத்தப்படும் என்று அறிவிக்கின்றார். ஆனால், அங்கு நிலையே வேறாக உள்ளது. 

அம்மாநிலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை எவ்வளவு உள்ளது என்ற விவரம் கூட அரசுக்கு தெரியவில்லை. இந்நிலையில், எப்படி அவர்களின் வங்கிக் கணக்கில் உதவித் தொகை செலுத்தப்படும் என்று தொழிலாளர்கள் கண்ணீர் மல்க வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, சூரத் மாவட்டத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஒரு வேளை உணவுக்காக நான்கு மணிநேரம் வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். அவர்களிலும் சொற்ப எண்ணிக்கையாளர்களுக்கு மட்டுமே உணவு பரிமாறப்படுகிறது. இந்த ஊரடங்கின்போது  இந்தியாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தெருவில் இறங்கிப் போராடியதற்காக தடியடி வாங்கியது முதலில் குஜராத் என்பது குறிப்பிடத்தக்கது. 

காலில் போட்டு மிதிக்கப்படும் சட்டம் 

1979 புலம்பெயர்ந்த தொழிலாளர் சட்டம் என்பது எங்கும் நடைமுறைப்படுத்தவில்லை என்பதே உண்மை. இதற்கு உதாரணமாய், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் சமீபத்தில் மக்களவையில் புலம்பெயர் தொழிலாளர் பற்றி எழுப்பிய கேள்விக்கு, 2019 வரை 2,297 நிறுவனங்கள் மட்டுமே இச்சட்டத்தில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது என்றும், அதன்படி இந்தியா முழுவதும் 88,889 தொழிலாளர்கள் இச்சட்டத்திற்குட்பட்டு பணியாற்றி வருவதாக மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார். இதன்படி பார்த்தால் ஏனையோர் மிகவும் மோசமான முறையில் கொத்தடிமைகளாக சுரண்டப்பட்டு வருகிறார்கள் என்பது தெரியவரும். மேலும், 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் 18 கோடி பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் 0.1 சதவிகிதத்திற்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே இச்சட்டத்தில் பதிவு செய்துள்ளார்கள் என்பதும் தெரியவரும். 

1979 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சட்டம் குறிப்பிடுவது யாதெனில் தொழிலாளர்கள் ஊதியத்தில் எந்த முரண்பாடும் இருக்கக்கூடாது. இவர்களுடைய பயணச் செலவு மற்றும் ஒரு மாத ஊதியங்களை அந்த நிறுவனங்கள் வழங்க வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு விடுதி மற்றும் கேண்டின் வசதிகள் செய்து தர வேண்டும். மாதத்திற்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அந்தச் சட்டம் குறிப்பிடுகின்றது. இதை கறாராக அமல்படுத்தி இருந்தாலே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சனை தற்போது உள்ளது போல பூதாகரமாக மாறி இருக்காது. ஆனால் அரசே அனைத்தையும் செய்யாமல் இருந்து விட்டு முதலாளிக்குச் சாதகமாக மட்டுமே செயல்பட்டதன் விளைவே, இந்த தொழிலாளிகளின் தற்போதைய நெருக்கடிக்குக் காரணம். 

ஊரடங்கின் போது தொழிலாளர்கள் பத்து நாட்கள் தாங்கள் வைத்திருந்த பணத்தை வைத்து சமாளித்தார்கள். அதன் பின் அவர்களின் முதலாளிகள் மற்றும் அரசுகள் கைவிட்ட நிலையிலேயே அவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்ல நடைபயணம் மேற்கொண்டனர். இதில் பல தொழிலாளர்கள் உணவின்றி பட்டினியாலும், சாலைவிபத்து, ரயில்விபத்து போன்ற விபத்துகளில் கொத்துக் கொத்தாகச் செத்து மடிந்தனர். இதற்கு காரணம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த குறைந்தபட்ச பார்வை மற்றும் திட்டங்கள் இல்லாததே ஆகும்.

இன்னும் ஒருபடி மேல போய் கர்நாடக முதலைமைச்சர் எடியூரப்பா, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு திரும்ப அனுப்ப மாட்டோம் என்று பொதுவெளியில் அறிவித்தது. இது அத்தொழிலாளர்கள் மீதான அக்கறை அல்ல, மாறாக அவர்களிடமுள்ள சொற்ப ரத்தத்தையும் உறிஞ்சி எடுக்க வேண்டும் என்ற கார்ப்பரேட்டுகளின் அடங்கா வெறியாகும். ஆகவே, தற்போதைய சூழலில் நமக்கு தேவை குஜராத் மாடல் அல்ல, கேரளா மாடல்தான்.