குஜராத். இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலம். அனைத்து துறைகளிலும் மிக பெரிய வளர்ச்சி, எல்லாவற்றுக்கும் முன் மாதிரியான மாநிலம், மக்களின் தேவைகளை கிட்டத்தட்ட நிறைவேற்றிய மாநிலம், நகரங்கள் மட்டுமல்லாது, கிராமங்களிலும் யாரும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வளர்ச்சி என கடந்த 15 ஆண்டுகளாக, பத்திரிகைகளில் மட்டுமல்லாமல்,சமூக ஊடகங்களிலும் திட்டமிட்டு பரப்பப்பட்டு,அதன் மூலம், ‘மோடி வளர்ச்சியின் நாயகன்’ என பெரும் பிம்பத்தை காவிக் கூட்டம் உருவாக்கியது. ஒரு மாநிலத்தை இவ்வாறு கொண்டு சென்றவரால் தான் இந்தியாவை வழி நடத்திட முடியும் என செய்த பிரச்சாரத்தின் விளைவுகளை இன்று நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. உண்மையிலேயே குஜராத் என்னவாக இருக்கிறது என்பதை அவ்வப்போது சில உண்மையான ஊடகங்கள் சொல்லி வந்தாலும் சமீபத்திய பெருந்தொற்றின் இரண்டாம் அலை அம்மாநிலத்தின் பல உண்மைகளை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது.
பலி எண்ணிக்கை 15 மடங்கு...
நம் நாட்டில் கோவிட் பெருந்தொற்று கடந்த ஆண்டு முதல் கோர தாண்டவம் ஆடி வருகிறது.எந்த மாநிலமும் இதற்கு தப்பவில்லை. இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே இரண்டாம் அலை காரணமாக, நாடு முழுவதும் பரவல் அதிகமாகி, ஆக்சிஜன் தேவை, மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு, மருந்து மற்றும் உபகரணங்கள் தட்டுப்பாடு என அனைத்து மட்டங்களிலும் சிக்கல் ஏற்பட்டது. மார்ச் மாதத்தின் நடுவில், 6000 பேர் மட்டுமே எங்கள் மாநிலத்தில் பாதிப்புள்ளாகியுள்ளனர் என அறிவித்தார் குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி. ஆனால் அவர் சொன்ன எண்ணிக்கையை விட 15 மடங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என ஊடகங்கள் கூறின.
கோவிட் தொற்றால் மட்டுமே பல நூறு பேர் இறந்து போனார்கள். ஏனைய பிற பிரச்சனைகள் ( நீரழிவு, இரத்தக் கொதிப்பு, முதுமையினால் ஏற்படும் நோய்கள்) இருந்தவர்களில் பலர் கோவிட் தொற்றுக்கும் உள்ளானார்கள். ஆனால் மாநில அரசு இம்மாதிரியான இணை நோய்களாலும் பாதித்து , தொற்றால் இறந்தவர்களை கணக்கிலேயே கொண்டு வராமல், வெறும் கோவிட் தொற்றால் உயிர் இழந்தவர்களை மட்டுமே புள்ளி விபரக் கணக்காக எடுத்துக் கொண்டது. இந்த வித்தியாசங்களை பல பத்திரிகைகளும், ஊடகங்களும் கேள்வி கேட்ட போது, மாநில அரசு பதிலளிக்கவில்லை. இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் வழிகாட்டுதலின் பேரிலேயே நாங்கள் செயல்படுகிறோம் என் மாநில முதல்வர் பதிலளித்தார்.
இரண்டாவது அலையை எதிர்கொள்ள அம்மாநில அரசு எவ்வித தயாரிப்போடும் இல்லை என்பதை இந்நிலை அப்பட்டமாக காட்டியது. இதன் விளைவாக நகரங்கள் மட்டுமல்லாது வேகமாக கிராமங்களுக்கும் பரவியது. விளைவு அம்மாநிலத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், படுக்கைகள் நிரம்பி வழிந்து, தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் படுக்கை கிடைக்காமலேயே மரித்தும் போயினர்.
அடிப்படையிலேயே குஜராத் மாநிலத்தில் இருக்கும் சுகாதார உள்கட்டமைப்பு மிக பலவீனமாகவே இருந்து வந்துள்ளது. தேவைக்கேற்ப அங்கே மருத்துவமனைகளோ, கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களோ கிடையாது. மருத்துவமனைகளில் கூட தேவைக்கேற்ப மருத்துவர்கள், செவிலியர்கள்,தூய்மைப் பணியாளர்கள் என இல்லாத அவலம். கட்டமைப்பும் மிகவும் கீழ்த்தரம். இதனாலேயே அவர்களின் சுகாதாரக் குறியீடுகள் ஒப்பீட்டளவில் மிகவும் கீழிருக்கும்.
மாநில முதல்வருக்கும் பாதிப்பு...
இந்த இரண்டாவது அலையின் தாக்கம் அம்மாநிலத்தை புரட்டி எடுத்துக் கொண்டிருக்கும் போதே, அம்மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்தன. தேர்தல்களின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் காற்றில் பறந்தன. அதனால் தொற்று பரவல் வேகமானது. கிராமப்புறங்களில் தொற்றின் பாதிப்பு அதிகமானது. மேலும் அம்மாநில அரசு தேர்தல் வேலைகளிலேயே இருந்ததால், விழிப்புணர்வுப் பிரச்சாரம் என எதையுமே செய்யவில்லை. இதில் கூடுதல் தகவல் என்னவென்றால் அம்மாநில முதல்வர் தொற்றால் பாதிப்படைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டார்.
அகமதாபாத், வடோதரா, சூரத், ராஜ்கோட், காந்தி நகர் என பெருநகரங்கள் மட்டுமல்லாது இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள், கிராமம் என மாநிலம் முழுதும் திண்டாடியது. இதன் மூலம் குஜராத் முழுதும் கொரோனாமயமானது.
நாம் முன்னரே பார்த்தது போல மாநில நிர்வாகம் இரண்டாவது அலையை எதிர் கொள்ள எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததால், ஒட்டு மொத்த மாநிலமே ஸ்தம்பித்தது. முதல்வர் கோவிட் பாதிப்பினால் ஒரு பக்கம் படுத்துக் கிடக்க, நிர்வாகமோ செயலற்றுக் கிடந்தது. அதன் விளைவாக மருத்துவமனையில் படுக்கை வசதிகள், அத்தியாவசிய மருந்துகள், ஆம்புலன்ஸ் ,பிணவறை வாகனங்கள் போதவில்லை. பல நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையாலும், படுக்கை இல்லாததாலும் மரணமடைந்து விட்டனர். ஒட்டுமொத்தமாக மாநில நிலைமை கட்டுப்பாடே இல்லாமல், குழப்பமான சூழலுக்கு இட்டுச் சென்றது. மாநிலமெங்கும் நூற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனை தெருக்களிலும், மயானங்களிலும் காத்துக் கிடந்தன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தனியார் மருத்துவமனைகள் மக்களை சுரண்டி பெரும் லாபம் ஈட்டின என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
உயர்நீதிமன்றம் தாமாகவே வழக்குப்பதிவு...
நிலை விபரீதமாகப் போக, திடீரென விழித்துக் கொண்ட அம்மாநில உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, மாநிலத்தின் சுகாதாரக் கட்டமைப்புகளை பற்றிய விவரம் கேட்டறிந்தனர். இவ்வளவு மரணங்களுக்கான காரணம் என்ன என்பதையும் மாநில அரசு விளக்கமளிக்க வேண்டும் என கட்டளையிட்டது. இவ்வளவு கொடுமைகளும் ஒரே மாதத்தில் (ஏப்ரல்) நடந்தது. மே மாதம் நிலைமை இதை விட மோசமானது. இவ்வழக்கை அப்பட்டமாக மறுத்து, ஆக்சிஜன் மற்றும் படுக்கை பற்றாக்குறையால் யாருமே மரணம் அடையவில்லை என மாநில அரசு விளக்கமளித்தது. இதே நேரத்தில் ஒன்றிய அரசு நிதி ஒதுக்குதலில் பாரபட்சம் இருப்பதாக குரல் எழுந்தது. நிதி மட்டுமல்லாமல், ஆக்சிஜன், தடுப்பூசி என அனைத்திலும், இவ்வாறாக இருப்பதாக பத்திரிகைகள் கூட எழுதின. மாநில உயர் நீதிமன்றமும் இவ்விசயத்தை கேள்வியாக்கியது. ஆனாலும் பதில் இல்லை. உண்மையான காரணம் என்னவென்றால் மாநில அரசு பாதிக்கப்பட்டோரின் என்ணிக்கையை “குறைத்து”ச் சொன்னது தான்.
புறக்கணிக்கப்பட்ட பொது சுகாதாரம்:
இன்று வரையில் அம்மாநில அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20,000த்தை தாண்டவில்லை. ஆனால் உண்மை நிலை வேறு.குஜராத்தின் உள்ளூர் நாளிதழ்கள், செய்தி சேனல்களும் இதே பிரச்சனைகளை முன் வைத்து விவாதங்கள் செய்தன. முக்கிய மையப் பொருளாக பேசின. கார்ட்டூன், நடுப்பக்க கட்டுரைகள் வந்தன. மாநில அரசோ எதையும் கண்டுகொள்ளவில்லை. குஜராத்தில் அரசு பொது சுகாதாரத் துறை பல ஆண்டுகளாக கவனிக்கப்படாத ஒரு துறை. அம்மாநிலத்தின் சுகாதாரத் துறையில் கிட்டத்தட்ட 8000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவ்விடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது ஏதோ சமீபத்திய விசயம் அல்ல. பல ஆண்டுகளின் மொத்தத்தேக்கம். கிராமப் பகுதிகளில் உள்ள பஞ்சாயத்து மருத்துவமனைகள் எவ்வித பயன்பாடும் இல்லாமல் போயின. இந்த பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு மிக முக்கிய தேவையாக இருந்தது “ ஸ்கேன் வசதி”. ஆர்டி - பிசிஆர் பரிசோதனை அடிப்படையான ஒன்றாக இருந்த போதிலும், துல்லியமாக தொற்று உள்ளதை உறுதி செய்ய ஸ்கேன் பரிசோதனை அவசியமானதாக மாறியது.
15 மாவட்டங்களில் ஸ்கேன் வசதியில்லை
குஜராத்தில் மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் உள்ள மாவட்ட மருத்துவமனைகளில் ஸ்கேன் வசதியே கிடையாது. இது தான் அம்மாநிலத்தின் கேவலமான நிலை. அதே போல சுகாதாரப் பணியாளர்கள், சிறப்புப் பிரிவு மருத்துவர்கள் , உயர் சிகிச்சைப் பிரிவுகள், பிரத்யேக பகுதி என எதுவுமே அம்மாநில அரசு மருத்துவமனைகளில் இல்லை. மாநில தலைநகரில் மட்டுமே இந்த வசதி இருக்கிறது. ஒரு ஸ்கேன் இயந்திரம் கூட இல்லாமல் இருக்கும் மாநிலத்தின் உள்கட்டமைப்பு எந்த நிலையில் இருக்கும்? இது தான் வளர்ச்சியின் மாடல் மாநிலமாம். இது இப்படியிருக்க குஜராத்தின் முக்கிய நகரங்களில் தனியார் மருத்துவமனைகள் பெரும் முதலீட்டில் துவக்கப்பட்டு , கொள்ளை லாபம் ஈட்டி வருவதும், மக்களைச் சுரண்டுவதும் சோக நிகழ்வுகள். திட்டமிட்டு பொதுத்துறையை புறக்கணிப்பதும், தனியாரை ஊக்குவிப்பதும், வாடிக்கையாக்கி விட்டது. அசமத்துவ வளர்ச்சியே இதற்குக் காரணம். அது மட்டுமல்லாமல் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பிஜேபி தொடர்ந்து கடைப்பிடித்து வரும் நவதாராளமயக் கொள்கைகளின் விளைவேயாகும் .
உண்மையின் சாட்சியம்:
அம்மாநிலத்தின் மிக முக்கியமான மாவட்டம் சவுராஷ்டிரா. அம்மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய உயரதிகாரியை ஒரு செய்தி சேனல் பேட்டி காண்கிறது. அவர் அந்த பேட்டியில் “ எங்கள் மாவட்டத்தில் உள்ள பாதிக்கப்பட்ட 700 நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க, இரண்டே மருத்துவர்களும், 12 செவிலியர்களுமே உள்ளனர் ” .எங்கள் பரிதாப நிலை யாருக்கும் வரவேண்டாம். ஒரு மாவட்ட உயர் அதிகாரியே இப்படி புலம்புகிறார் என்றால் மாநில மக்களின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கும். 2017 ஆம் ஆண்டே அந்த மாநிலத்தை பற்றிய சி.ஏ.ஜி அறிக்கையில் குஜராத்தின் மோசமான சுகாதார உள்கட்டமைப்பு, மக்களின் வரிப்பணம் எவ்வாறெல்லாம் தேவையற்ற முறையில் செலவழிக்கப்படுகிறது, அரசு மருத்துவமனைகளின் அவலம், நோயாளிகளின் பரிதாப நிலை, விலங்குகள் சுற்றித் திரியும் காடுகளை போல் மாவட்ட மருத்துவமனைகள் இருப்பதையும் சொன்னது. ஆனாலும் அந்த நிலை இன்று வரை மாறவில்லை என்பதே உண்மை நிலை.
அம்மாவட்டத்தின் (சவுராஷ்டிரா) ஆட்சி தலைவர், எங்கள் மாநிலமும் தமிழ்நாடு, கேரளத்தை போல் பொது சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தினால் தான் எதிர் வரும் மூன்றாம் அலையை எதிர் கொள்ள முடியும் என தன் பரிதாப நிலையை வெளிப்படுத்தினார். இந்த குஜராத் மாடலை வளர்ச்சியின் அடையாளம் என பத்திரிகைகள்,ஊடகங்கள், பிஜேபி கட்சியினர் சொன்னார்கள். ஆனால் உண்மை நிலை ஒரு நாள் நிச்சயம் வெளியே வரும் என்பதற்கு பொது சுகாதார அவலங்களே பெரும் சாட்சி.
கட்டுரையாளர் : என்.சிவகுரு