புதுதில்லி:
கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான அடுத்த இரண்டு மாத போராட்டத்தை உறுதி செய்ய சுகாதார உள்கட்டமைப்பை அதிகரிக்க வேண்டுமென 75 சதவீத தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 11 நகராட்சிகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், தில்லி, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் 70 சதவீத தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன என மத்திய அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பழைய நகரங்கள், நகர்ப்புற குடிசைப் பகுதிகள், உயர் அடர்த்தி கொண்ட முகாம்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் வசிக்கும் பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
முதன்மை சுகாதாரச் செயலாளர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் 11 நகராட்சி பகுதிகளைச் சேர்ந்த மற்ற அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் சனிக்கிழமை உயர் மட்டக் கூட்டத்தை நடத்திய மத்திய சுகாதார செயலாளர் பிரீதி சூடான், அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளில் பாதிக்கப்படக்கூடிய மக்களை தீவிரமாக கண்ணிகாணிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இறப்பு விகிதத்தை குறைக்க மருத்துவம் சார்ந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இந்தியாவில், “கடந்த 24 மணி நேரத்தில் 6,767 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. நாடு தழுவிய அளவில் 1,31,868 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,867 ஆக உயர்ந்துள்ளது. ஆக்ஸிஜன், வெண்லேட்டர்கள் மற்றும் ஐ.சி.யு படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் மீது சிறப்புக் கவனம் செலுத்துவதன் மூலம் அடுத்த இரண்டு மாதங்களுக்கான போராட்டத்தை உறுதி செய்வதற்காக சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 41.28 சதவீத நோயாளிகள் மட்டுமே குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.