புதுதில்லி:
தொழிற்சங்கங்கள் போராடிப்பெற்ற உரிமைகளை பறிப்பதைக் கண்டித்தும் ஐடி ஊழியர்களுக்கு எதிரான போக்கை கடைப்பிடிக்கும் மத்திய பாஜக அரசு மற்றும் இந்தியஐடி துறை நிறுவனங்களின் சங்கம் (நாஸ்காம்) ஆகியவற்றைக் கண்டித்தும் ஜூலை 3-ல் நடைபெறும் கண்டன இயக்கத்தில் ஐடி ஊழியர்கள் பங்கேற்குமாறு ஐடி ஊழியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து அமைப்பின் தேசிய கன்வீனர் கே.சி.கோபிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கோவிட் தொற்று நோய் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி மத்தியில் அமெரிக்க அதிபர் 2020 டிசம்பர்31 வரை எச் -1- பி விசா முடக்கம் என்று அறிவித்துள்ளார். இதுஇந்திய நாட்டு ஐடி துறைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்திய ஐடி துறையில் செயல்படும் ஐடி சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கிறது. அமெரிக்க அதிபரின்இந்த நடவடிக்கை 19 லட்சம் கோடி வர்த்தகம் அளவிலான நமது நாட்டின் பொருளாதாரத்தை மட்டும் பாதிக்கும் விஷயமல்ல மாறாக அங்கு பணிபுரியும் நமது நாட்டு இளைஞர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது . நமது இந்திய நிறுவனங்கள் 2021 அக்டோபர் வரை இந்த விசாக்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1.7 லட்சத்திற்கு அதிகமான இந்திய ஐடி ஊழியர்கள் அமெரிக்காவில் பணிபுரிகிறார்கள். நமது நாட்டிற்கு அமெரிக்க சந்தை மிகப்பெரிய சந்தையாகும். இந்த நடவடிக்கையினால் இந்திய அந்நிய செலாவணிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.மருத்துவமனைகள், மருந்து மற்றும் பயோடெக் நிறுவனங்கள், மாநில மற்றும் உள்ளூர் அரசு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புநிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளியேறும் நிலை ஏற்படும். இதை சிலிகான் பகுதி அமெரிக்கர்களே விரும்பவில்லை. இதே போன்று 2018 –ல் டொனால்ட் டிரம்ப் அறிவித்து பின்னர்திரும்ப பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசுதனது ராஜ்ஜிய உறவை பயன்படுத்தி இந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்று தேசிய ஒருங்கிணைப்புக்குழு அரசை வலியுறுத்துகிறது.
தொழிலாளர் சட்டங்களில் தளர்வு கோரும் ஐடி முதலாளிகள் சங்கம்
இந்திய ஐடி துறை நிறுவனங்களின் சங்கம் நாஸ்காம்இந்த நெருக்கடி நேரத்தை பயன்படுத்தி சிறப்பு பொருளாதார மண்டல சட்டத்தில் உள்ள சன் செட் விதிகளை அமல்படுத்தவும் மேலும் தொழிலாளர் சட்டங்களில் தளர்வு செய்ய அனுமதி வேண்டுமென மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. ஊரடங்கு காலத்தில் தங்குதடையில்லாமல் ஒரு துறை பணி புரிந்து இருந்தது என்றால் அது ஐடி துறை மட்டும் தான் என்று சொல்லலாம். 90 சதவீத ஊழியர்கள் தங்கள் வீடுகளிலிருந்து பணி புரிந்து வருகின்றனர். இந்த சன் செட் விதி அமல்படுத்தப்பட்டால் வேலையிழப்பு சதவீதம்அதிகமாகும். மேலும் ஊதிய வெட்டு பென்ச் நிலைமை அதாவது வேலைக்கான காத்திருப்பு அதிகமாகும்.
சன் செட் விதி என்பது ஊழியர்களுக்கு பாதகமானதாகும். அதாவது ஊழியர்கள் நிறுவன அட்டவணையில் பணிபுரிபவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு ஊதியம், படிகள் மற்றும் சமூக பாதுகாப்பு பலன்கள் ஏதும்சட்ட ரீதியாக கிடைக்காது. இந்த கொடூரமான விதிகளை அமல்படுத்த வேண்டுமென நாஸ்காம் இந்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது. அதோடு மட்டுமல்ல சில வருமானவரி விலக்கு மற்றும் மானியங்களும் நிறுவனங்களுக்கு கிடைக்கும். ஊழியர்களுக்கு தொழிலாளர் சட்டப்படி ஊதியம் வழங்காத ஐடி நிறுவனங்கள் இந்த நடவடிக்கைகளை அமல்படுத்தினால் மேலும் சுரண்டல் மற்றும் கொள்ளை லாபம் ஈட்ட வழி வகை செய்யும். இந்த கோரிக்கை மீது மத்திய தொழிலாளர் துறை மௌனம் சாதித்து வருகிறது. ஐடி நிறுவனங்களின் சங்க கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து இந்திய தொழிலாளர் சட்டங்களை முழுமையாக முறையாக அமல்படுத்த அறிவுறுத்த வேண்டும் என ஒருங்கிணைப்புக்குழு கேட்டுக் கொள்கிறது.
மன உளைச்சல்-குடும்ப வாழ்க்கை பாதிப்பு
அதுமட்டுமல்ல வீட்டிலிருந்து வேலை என்பதை வரும் ஜூலை 2025 வரை நீடிக்க அனுமதி அளிக்க வேண்டுமென அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது நாஸ்காம். அதற்குமோடி தலைமையிலான மத்திய அரசு அதற்கான முறைகளை வடிவமைத்து தருமாறு நாஸ்காமிடமே கேட்டுள்ளது. ஏற்கனவே வீட்டிலிருந்து வேலை முறையினால் பெரும்பாலான ஊழியர்களின் தனிப்பட்ட, சமூக மற்றும் குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டு மன உளைச்சல்களுக்கு உட்பட்டு உள்ளனர். எட்டு மணி நேர வேலை என்பது அறவே அமல்படுத்தாத நிலை. ஊழியர்களின் பல ஊதிய படிகள் வெட்டப்பட்டு வருகிறது.
இந்த முறை அமல்படுத்தப்பட்டால் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சங்கம் சேரும் உரிமை, கூட்டு பேர உரிமை,ஊழியர்களுடன் கலந்தாலோசிக்கும் உரிமை, பேச்சுரிமை, முதலாளி மற்றும் தொழிலாளி எனும் அடிப்படை உறவு என தொழிற்சங்கங்கள் போராடி பெற்ற அனைத்து உரிமைகளும் பறிக்கப்படும் ஆபத்து ஏற்படும். கோவிட் தொற்று மற்றும் ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி ஐடி ஊழியர்களின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசு மற்றும் நாஸ்காம் அமைப்பின் நடவடிக்கைகளை ஐடி சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு வன்மையாககண்டிக்கிறது. நாட்டில் நிலவும் அசாதாரண சூழலில் இருந்துமக்களை காப்பாற்றும் அரணாக இருக்க வேண்டிய அரசு, நாஸ்காம் எடுக்கும் தொழிலாளர் மற்றும் ஐடி ஊழியர் விரோதபோக்கிற்கு ஆதரவு அளித்து தனது வர்க்க குணத்தை பிரதிபலித்துள்ளது. ஐடி ஊழியர் விரோதப் போக்கை கைவிட்டு தகவல் தொடர்பு துறையில் பணியாற்றும் லட்சக்கணக்கான ஊழியர்களை பாதுகாக்க ஜூலை 3 அன்று மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் அகில இந்திய கண்டன இயக்கத்தில் ஐடி ஊழியர்கள் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.