tamilnadu

img

பத்திரிகையாளர்களை நீக்குவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தில்லி: 
பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றிவரும் பத்திரிகையாளர்கள், ஊழியர்களை பணியிலிருந்து நீக்குவது அல்லது ஊதியத்தை குறைப்பது ஆகியவற்றை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பத்திரிகையாளர்கள் சங்கங்கள் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளன. தேசிய அலையன்ஸ் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ்(என்.ஏ.ஜே.), டில்லி யூனியன் ஆப்  ஜர்னலிஸ்ட்ஸ் மற்றும் பிரிஹன்மும்பை யூனியன் ஆப்n ஜர்னலிஸ்ட்ஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து உச்சநீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு (பி.ஐ.எல்.) தொடர்ந்துள்ளன.

கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்தியாவில் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இச்சமயத்தில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணிக்கு வராத ஊழியர்களை பழிவாங்கும் நோக்கோடு பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் அல்லது ஊதியக்குறைப்பு நடைபெறுகிறது. தேசிய ஊரடங்கின்போது இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திரமோடியும் மீடியா நிறுவன முதலாளிகளிடம் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஊழியர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். எனவே, அதை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் கடந்த 16 ஆம் தேதி பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில், கொரோனா வைரஸ் பாதிப்பால் (கோவிட் 19 பாதிப்பு) கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கை காரணம் காட்டி மீடியா நிறுவனங்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது, அவர்களது ஊதியத்தை குறைக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளதோடு, இதனை மத்தியஅரசு, இந்தியன் நியூஸ்பேப்பர் சொசைட்டி (ஐ.என்.எஸ்), நியூஸ் பிராட்கேஸ்டர்ஸ் அசோசியேஷன் ஆகியவை உறுதிப்படுத்தவேண்டும் என கோரப்பட்டுள்ளது.மேலும், இந்த ஊரடங்கு காலத்தில் மீடியா நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட உத்தரவுகளையும், நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று பொதுநல வழக்கில் கோரப்பட்டுள்ளது.