tamilnadu

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுவையில் பிரச்சாரம்

புதுச்சேரி, மே 14-புதுச்சேரி மாநிலம் நிலத்தடி நீரையே குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் நம்பியிருக்கிறது. பெருகி வரும் ரசாயன ஆலைகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றின் அளவுக்கு அதிகமான தண்ணீர் பயன்பாட்டினால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து உப்புநீர் உட்புகுந்திருக்கிறது. சுற்றுசூழல் மாசு அடைந்திருக்கிறது. விவசாயம் பெருமளவு பாதிப்புகுள்ளாகி வறட்சியால் ஏழைஎளிய மக்களும், கால்நடைகளும் கடுமையான விளைவுகளை சந்திக்கின்றனர். தொடர்ந்து வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நாள்தோறும் போராடி வருகின்றனர். இச் சூழலில் மத்திய அரசு மேலும் விவசாயத்தையும் அதை நம்பியிருக்கின்ற லட்சக் கணக்கான மக்களையும், மீனவ சமுதாயத்தையும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் விதத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் அமலாக்கத் துடிக்கிறது. புதுச்சேரி பாகூர் பகுதியில் 2 சதுர கிலோ மீட்டர் பரப்பிலும், ஆழமற்ற கடல் பகுதியில் 1653 ச.கி. மீ பரப்பிலும், காரைக்காலில் 39 ச.கி.மீ பரப்பிலும் 116 எரிவாயு கிணறுகளை அமைத்து ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. இத்திட்டத்திற்கு புதுச்சேரி அரசு அனுமதி அளிக்க மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. புதுச்சேரி அரசின் முடிவை வரவேற்றிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், புதுச்சேரி அரசின் சுற்றுச்சூழல் துறைக்கு தெரியாமலேயே மத்திய அரசு எல்லைகளை வரையறுத்து அனுமதி வழங்கியிருக்கிறது. மக்களிடம் எவ்வித கருத்துக் கேட்பு நிகழ்ச்சிகளையும் நடத்திடாமல் பெருமளவு மக்களை பாதிக் கும் இத்திட்டத்தை அமலாக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்திருக்கும் மத்திய அரசை பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.ஹைட்ரோகார்பன் திட்டத்தின் விளைவுகளை விளக்கியும் அதை தடுத்து நிறுத்திடவும் இம் மாதம் 22 ஆம் தேதி அறிவியலாளர்களும், அறிவுஜீவிகளும் பங்கேற்கும் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை புதுச்சேரியிலும், காரைக் காலிலும் மாபெரும் பிரச்சார இயக்கம் நடத்த உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.