tamilnadu

img

ஊரடங்கை பயன்படுத்தி பொதுத்துறைகளுக்கு உலை வைத்த பாஜக அரசு....

புதுதில்லி:
கொரோனா தொற்று பரவல்தடுப்பு ஊரடங்கை பயன்படுத்தி, நாட்டின் பொதுத்துறை நிறுவனங் களை தனியாருக்கு தாரைவார்த்து, பெரும் முதலாளிகளுக்கு தனது விசுவாசத்தை நிருபித்துள்ளது மத்தியபாஜக அரசு. ‘சுயசார்பு திட்ட’நான்காம் கட்ட அறிவிப்பில் மின்விநியோகம், விண்வெளித்துறை, நிலக்கரித்துறையில் தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் அந்நிய முதலீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை தடுக்க நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால் நாடு முழுவதும் மக்கள் வேலை, வருமானமின்றி, உணவின்றி பெரும் அவதிப் பட்டு வருகின்றனர். ஆனால் இதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாத மத்திய அரசு, ஊரடங்கை பயன்படுத்திக்கொண்டு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்துள்ளது. சுயசார்பு திட்ட நான்காம் கட்ட அறிவிப்புகள் குறித்து தில்லியில் மே 16 சனிக்கிழமையன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் அனுராக் தாக்குர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் கூறியதாவது:

சுயசார்பு பாரதத்தை உருவாக்க பல போட்டிகளை எதிர்கொள்ள வேண்டும். போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு பாடுபடுகிறது; பல்வேறு துறைகளில் கொள்கை ரீதியிலான மாற்றம் தேவைப்படுகிறது .சுயசார்பு பாரதத்தை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். ஜி.எஸ்.டி போன்ற முக்கியமான சீர்திருத்தங்களை பிரதமர் கொண்டு வந்திருக்கிறார். நாட்டில் தொழில் துறை வளர்ச்சிபெற கொள்கை சீர்திருத்தங்கள் தேவை. கடந்த சில ஆண்டுகளாக வலிமையான சீர்திருத்தங்களை பிரதமர் கொண்டு வருகிறார். ஜி.எஸ்.டிபோன்ற வரி சீர்திருத்தங்களால் முதலீடுகளை ஈர்க்கும் நாடாக இந்தியா விளங்குகிறது.நிலக்கரித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்க திட்டம். நிலக்கரி இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வணிக ரீதியிலாக நிலக்கரி எடுப்பதற்கு முதல்கட்டமாக 50 சுரங்கங்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளன. ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளதால் சீர்திருத்தம் தேவைப்படுகிறது. 500 கனிமச்சுரங்கங்கள் வெளிப் படையாக ஏலம் விடப்படும். நிலக்கரி படுகை மீத்தேன் ஏலம் விடப்படும். புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் மின்விநியோகம் தனியார்மயப்படுத்தப்படும். 

முதலீடுகளுக்கான அனுமதியை அதிவிரைவாக வழங்க அரசு செயலர்கள் மட்டத்திலான குழுக்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு அமைச்சகத்திலும் திட்ட மேம்பாட்டு பிரிவு உருவாக்கப்படும்.திட்டங்களை அடையாளம் கண்டுமுதலீட்டாளர்கள், மத்திய, மாநில அரசுகளை ஒருங்கிணைக்கும் பணியில் திட்ட மேம்பாட்டு பரிவு ஈடுபடும்.முதலீடுகளை ஈர்ப்பதன் அடிப்படையில் மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.