புதுதில்லி, ஏப்.4- ஏழைகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் என்று பிரதமர் மோடியால் நாடு முழுவதும் விளம்பரம் செய்யப்பட்ட திட்டம்தான் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா. 2016-ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த திட்டத்தால், விறகடுப்பில் சமைக்கும்சித்ரவதையிலிருந்து பெண்கள் விடுதலைபெற்றிருக்கிறார்கள்; மோடி, பெண்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்துள்ளார் என்று இப்போது வரை பத்திரிகைகள், ஊடகங்களில் விளம்பரங்கள் செய் யப்பட்டு வருகின்றன.அண்மையில் ஒடிசாவில் நடைபெற்றபொதுக்கூட்டத்தில் மோடி பேசும்போதும்,உஜ்வாலா யோஜனாவை குறிப்பிடத்தவறவில்லை. “நான் சிறுவனாக இருந்தபோது, என் தாய் அடுப்பங்கறையில் புகையில் வாடியதை இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன்; அதனால்தான் உஜ்வாலாயோஜனா திட்டத்தைக் கொண்டுவந்தேன்” என்று மோடி உருக்கம் காட்டினார். புகையிலிருந்து பெண்கள் விடுதலை பெற்று விட்டார்கள் என்றும் கூறிக்கொண்டார். இதனிடையே, அதே ஒடிசா மாநிலம் பூரி தொகுதி பாஜக வேட்பாளர் சம்பித் பாத்ரா வீடியோ பதிவு ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றினார். அதில், தனதுதொகுதிக்கு உட்பட்ட வயது முதிர்ந்த பெண்ணுக்கு பிரதமர் மோடி உதவியால்வீடு கிடைத்துள்ளது என்று கூறியதுடன், தனக்கு அந்த மூதாட்டி உணவு சமைத்துப்பரிமாறினார்; நானும் அந்த தாய்க்கு எனது கைகளால் உணவளித்தேன் என்று உருகியிருந்தார்.
இந்த வீடியோதான் தற்போது பூமாராங் ஆகியுள்ளது.அது என்னவென்றால், பாத்ரா விருந்துசாப்பிட்ட வீட்டில், அந்த மூதாட்டி இன்னும்விறகு அடுப்பில்தான் சமைத்துக் கொண்டிருக்கிறார் என்பதாகும். இதனைக் குறிப்பிட்டுள்ள பத்திரிகையாளர் பிரசாந்த் குமார், “உஜ்வாலா யோஜனா திட்டம் வெற்றியடைந்து, ஒவ் வொரு ஏழைத்தாயும், ஏழை சகோதரியும், தங்களுக்கு எரிவாயு சிலிண்டர் அளிக்கப்பட்டுள்ளதாக விளம்பரத்தில் வந்து கூறினார்களே.. ஆனால், பாத்ரா சாப்பிட்ட மூதாட்டியின் வீட்டில் காலி சிலிண்டர் கூட தென்படவில்லையே...” என்று கேட்டுள்ளார்.மோடியின் உஜ்வாலா யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்ட லட்சணத்திற்கு பாஜக வேட்பாளர் பாத்ரா வெளியிட்ட வீடியோவே போதும் என்றும் அவர்கூறியுள்ளார்.உஜ்வாலா யோஜனா திட்டத்தில் 6 கோடி பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமை பீற்றியிருந்த நிலையில், அவர்களில் 1 கோடியே 20 லட்சம் பேர் இரண்டாவது முறையாக எரிவாயு நிரப்பவில்லை என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானே நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.