புதுதில்லி:
நாடு முழுவதும் அனைத்து ரயில் நிலையங்களிலும் உணவகங்கள், சிற்றுண்டி கடைகளைத் திறக்க ரயில்வே வாரியம் அனுமதித்துள்ளது. அனைத்துப் பயணிகளும் பார்சல் வாங்கிச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து ரயில் நிலையங்களில் மூடப்பட்டிருந்த உணவகங்கள், சிற்றுண்டி கடைகளைத் திறக்க மண்டல ரயில்வே நிர்வாகமும், ஐஆர்சிடிசியும் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுக்கலாம். உணவகங்கள், ஓய்வறைகள் ஆகியவற்றில் உணவு சாப்பிடுவதற்கு அனுமதியில்லை. பார்சல் மட்டுமே வழங்க அனுமதிக்கப்படும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், பார்சல் உணவுகள், அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள், புத்தக நிலையங்கள் உள்ளிட்டவற்றைத் திறக்கலாம். உணவகங்களைத் திறந்து பயணிகளுக்கு வழங்கும்போது அந்தந்த ரயில்வே மண்டலங்கள், வாரியத்தின் வழிகாட்டி விதிமுறைகள்படி செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.'