நோய் பேரிடர் உலகம் முழுவதும் 10 கோடி மக்களை தீவிர ஏழ்மைக்கு தள்ளிவிட்டுள்ளதாக உலகவங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார்.கோவிட்-19 நோயின் பொருளாதார தாக்கம் அவ்வளவு கடுமையானதாக உள்ளது. இதன் தீவிரத்தை இந்தியாவும் அனுபவிக்கிறது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம்(CMIE) என்கிற அமைப்பின் ஒரு ஆய்வு ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் மாதாந்திர சம்பளம் பெறுகிற ஒரு கோடியே 80 லட்சம் பேர் வேலையை இழந்து இருப்பதாக சொல்கிறது .
கடன்சுமை, காப்பீட்டுக்கு செலுத்தும் பணம் , முன்னெப்போதும் கண்டிராத மின்கட்டணம் மற்றும் மருத்துவ செலவுகள் ஆகியவற்றிற்காக மக்கள் அரசாங்கத்தை எதிர்பார்த்து நிற்கிறார்கள் .இது ஒரு நிவாரணத்தை அளிக்கும் என்று நம்புகிறார்கள். நிவாரணங்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உதவுகின்றன என்பது உண்மையே. ஆனால் மிகக் கடுமையான துயர் மிகுந்த இந்த காலத்தில் அவை பெரிய மாற்றத்தை கொண்டு வந்து விடப்போவதில்லை .அரசின் கைகளில் உடனடியான தீர்வு இருக்கிறது மத்திய மாநில அரசாங்கங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் .அதாவது பல்லாண்டு காலமாக நிரப்பப்படாமல் இருக்கக்கூடிய பல லட்சக்கணக்கான அரசு பணியிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கங்கள் முன்வர வேண்டும். ஏறத்தாழ எல்லா அரசுத் துறைகளும், மத்திய அமைச்சகங்கள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் ,தீயணைப்பு நிலையங்கள், அரசு பள்ளிகள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் தற்போது நிரப்பப்படாத பணியிடங்கள் ஏராளமாக இருக்கின்றன. அரசாங்கத்தின் சொந்த புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே ஏறத்தாழ ஏழு லட்சம் வேலைவாய்ப்புகள் மத்திய அரசின் துறைகளிலும் அமைச்சர்கங்களிலும் நிரப்பப்படாமல் உள்ளன. இது மார்ச் 2018 கணக்காகும் .தோராயமான மதிப்பீடுகளின் படி தற்போது வேலைவாய்ப்பற்ற வர்களாக மாற்றப்பட்டு இருப்பவர்களில் 10 சதவீதம் பேருக்கு இதனால் வேலை வாய்ப்பு கிடைக்கும் .இவர்களெல்லாம் உரிய கல்வித் திறன் பெற்றவர்கள். இதுதவிர மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களுக்கான பணியிடங்களில் 60% நிரப்பப்படாமல் காலியாக உள்ளது .லட்சக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் இந்தியா முழுவதும் நிரப்பப்படாமல் உள்ளன .ஹரியானாவில் மட்டும் 31 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது இந்த ஆண்டு மார்ச் மாத கணக்கு. இந்த ஆண்டு ஏப்ரல் மாத கணக்கின்படி உத்தரப்பிரதேசத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்தியாவின் கிராமப்புறங்களில் பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் மிகுந்த பற்றாக்குறை இருப்பதாக பல்வேறு விதமான ஆய்வுகள் தெரிவிக்கின்றன .
உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள் கோவிட்-19க்கு பிந்தைய பொருளாதாரம் எப்படி செயல்படுகிறது என்பது குறித்த தங்கள் பார்வைகளை மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். கட்டுப்பாடுகளற்ற பொருளாதார நடவடிக்கைகள் திறன் அற்றது என்பது நிரூபணமாகியிருக்கிறது. இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கு இந்த கட்டுப்பாடுகளற்ற பொருளாதாரம் தடையாக இருக்கிறது . அரசு எந்திரத்தை மீண்டும் கட்டியமைப்பதில் முழு கவனமும் செலுத்தப்பட வேண்டும். அது தனியார் துறைக்கு தேவையான கட்டுப்பாடுகளை உருவாக்கும்.லட்சக்கணக்கில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது ஒரு நல்ல துவக்கமாக அமையும். இப்படி செய்வது அரசின் சேவைகளை சரியான நேரத்திலும் திறமையாகவும் கொண்டு சொல்வதற்கு மிகவும் முக்கியமானதாகும். அதே சமயத்தில் மக்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளையும் அளிப்பதாக அமையும்.
தமிழில்: க.கனகராஜ்