புதுதில்லி:
இரண்டாவது முறையாக, மத்திய ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, 8 அமைச்சரவைக் குழுக்களை மாற்றி அமைத்துள்ளார்.இதில், பாஜக மூத்த தலைவரும், தனக்கு அடுத்த இடத்தில் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருப்பவருமான ராஜ்நாத் சிங்கை, வெகுவாக மோடி ஓரங்கட்டியுள்ளார். ராஜ்நாத் சிங்கிற்கு, 2 குழுக்களில் மட்டுமே இடம் வழங்கி, அவமதித்துள்ளார்.
அதேநேரம், தன்னுடைய நிழல் என்று கூறப்படும், இன்றைய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை 8 குழுக்களிலும் நியமித்து, அவரின் ஆதிக்கத்திற்கு வழி ஏற்படுத்தியுள்ளார்.
நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு, வீட்டு வசதி அமைச்சரவைகுழு, பொருளாதார விவகாரங்களுக் கான அமைச்சரவைக் குழு, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, அரசியல் விவகாரங்களுக் கான அமைச்சரவைக் குழு, பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் குழு, முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவைக் குழு, வேலைவாய்ப்பு மற்றும் திறன்மேம்பாட்டுக்கான அமைச்சரவைக் குழு- ஆகிய இந்த 8 குழுக்களைத்தான் நரேந்திர மோடி மாற்றி அமைத்துள்ளார்.
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன், ரயில்வே மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய இரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் சதானந்த கவுடா, வேளாண்மை, விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், சட்டம், நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத், உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஜெய்ஷங்கர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவில் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், நரேந்திரசிங் தோமர், ரவிஷங்கர் பிரசாத், நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சரான ராம் விலாஸ் பஸ்வான், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட், சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்றம் மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நாடாளுமன்ற அலுவல்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரலாகத் ஜோஷி ஆகியோர் உள்ளனர்.
பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழுவில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் ஆகியோர் இருக்கின்றனர். முதலீடு மற்றும் வளர்ச்சிக்குழுவில் பிரதமர் மோடி,அமித்ஷா, நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோர் உள்ளனர். வேலைவாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்புக்கான குழுவில் பிரதமர் மோடி,அமித்ஷா, நிர்மலா சீதாராமன், நரேந் திர தோமர், பியூஷ் கோயல், மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால், தர்மேந்திர பிரதான், திறன் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே,தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் சந்தோஷ் கங்காவார், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகி
யோர் இடம் பெற்றுள்ளனர்.
எனினும் இந்த 8 குழுக்களிலும் இடம் பெற்றிருப்பவர் என்றால், உள்துறை அமைச்சர் அமித்ஷா மட்டும்தான். ஏனென்றால் பிரதமர் மோடியே 6 குழுக்களில்தான் இடம்பெற்றுள்ளார். அதிகாரப்பூர்வமாக அமைச்சரவையில் தனக்கு அடுத்த இடத்தில் ராஜ்நாத் சிங்-தான் இருக்கிறார் என்றாலும், உண்மையில், அமித்ஷாவே தனக்கு அடுத்த
அதிகாரம்பெற்ற அமைச்சர் என்பதை, 8 அமைச்சரவைக் குழுக்களில் அமித்ஷாவுக்கு இடமளித்ததன் மூலமாக மோடி மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.
அதுமட்டுமல்ல, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குகூட 7 குழுக்களிலும்,ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு5 குழுக்களிலும் இடம் வழங்கியிருக்கும் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-கிற்கு, 2 அமைச்சரவைக் குழுக்களில் மட்டும் இடமளித்து அவமதித்துள்ளார்.
பொருளாதார விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு குழுக்களில் மட்டுமே ராஜ் நாத்துக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படும் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் மூத்த தலைவரான ராஜ்நாத் சிங் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.இது பாஜக தலைவர்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இங்கே குறிப்பிட வேண்டிய, மற்றொரு முக்கியமான விஷயம் என்ன வென்றால், மத்திய ஜவுளி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி, அமைச்சரவைக் குழுக்கள் அனைத்துக்கும் சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்பட்டு இருப்பதுதான்.