புதுதில்லி:
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள்மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தினை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை யினருக்கு தில்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.சி.பி.ஐ. தன்னை இழிவுபடுத்த விரும்புகிறது என்றும் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கூறி உச்சநீதிமன்றத்தில் ப. சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை புதனன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, அமலாக்கத்துறையினர் ப. சிதம்பரத்தினை காவலில் எடுத்து விசாரிக்க தில்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் செவ்வாயன்று அனுமதி வழங்கியுள்ளது. திகார் சிறைக்கு அமலாக்கத்துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொள்ளவும், தேவைப்பட்டால் அவரை கைது செய்யவும் அனுமதி அளித்துள்ளது.