புதுதில்லி;
தற்போதுவரை, கொரோனா வைரஸூக்கு பிரத்யேகமான தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. நோய்ப்பரவாமல் மற்றும் தீவிரமடையாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டுமே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.ஆனால், சங்-பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள், பாரம்பரிய மருந்து என்று கோமியம், சாணம் சாப்பிடுங்கள் என்று, மக்களின் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், ‘பதஞ்சலி’ நிறுவன முதலாளியும், கார்ப்பரேட் சாமியாருமான ராம்தேவ் அண்மையில் விளம்பர வீடியோ ஒன்றைவெளியிட்டுள்ளார். அதில் காவிஉடையில், கையில் ஒரு செடியுடன்தோன்றும் அவர், “நாங்கள் அறிவியல் ஆராய்ச்சி மேற்கொண்டுஅஷ்வகந்தாவை கண்டுபிடித் துள்ளோம். அஷ்வகந்தா கொரோனா புரதத்தை மனித புரதத்துடன் கலக்க அனுமதிக்காது” என்று வதந்தியைக் பரப்பியுள்ளார்.கொரோனா அச்சத்தில் மக்களும், மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில், மருத்துவ உலகமும் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், கொரோனாவைப் பயன்படுத்தி, பல ஆயிரம் கோடி ரூபாய்களை கல்லா கட்டும் மோசடியில் ராம்தேவ் இறங்கியுள்ளார்.
இதற்கு மருத்துவர்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. “நோய் எதிர்ப்பு சக்தி குறித்துசாதாரண டுவிட்டர் செய்திகள்கூட மக்களைக் குழப்பக்கூடும்; ஆகவே, இதுபோன்ற செய்திகள், போதிய கல்வியறிவு இல்லாத மக்களை தவறாக வழிநடத்தி விடும் அபாயம் உள்ளதால், இந்த விளம்பரங்களை அரசு தடை செய்ய வேண்டும்” என்று இந்திய பொது சுகாதார நிறுவனத்தை சேர்ந்த பேராசிரியர் டாக்டர் கிரிதர் பாபு கூறியுள்ளார்.