திருச்சிராப்பள்ளி:
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நீர்நிலைகளில் ஏற்படக் கூடிய விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு முகாம் திருச்சியில் செவ்வாய் அன்று நடைபெற்றது.
இதில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைமற்றும் வருவாய்துறை, மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் என பல்துறைகளின் மீட்பு ஒத்திகை நடவடிக்கைகளையும், மீட்பு உபகரணங்கள் மற்றும் கண்காட்சியினை வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து பார்வையிட்டார், இதில்மாவட்ட ஆட்சியர் சிவராசு, தீயணைப்புத்துறை துணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்த வருவாய் நிர்வாக ஆணையர் ராதா கிருஷ்ணன் கூறியதாவது:தில்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசினை யடுத்து, தமிழகத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வருகிறது, எந்த பீதியும் வேண்டாம், வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்.வடமாநிலங்களிலும் இந்த காற்று மாசு படிப்படியாக குறையும், காற்றின் தன்மை குறைவாக இருந்ததால் தான் தமிழகத்தில் 2 தினங்கள் பனிப்பொழிவு இருந்தது. சுற்றுச்சூழல் அமைச்சகம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதனால் தமிழகம் நல்ல சூழலிலேயே உள்ளது. வடமாநிலங்களில் வயல்களில் பனி முடிந்ததும் எரிப்பது போன்று தமிழகத்தில் இல்லையென்பதால் இதுபோன்ற நிலை தமிழகத்திற்கு ஏற்படாது.
ஆழ்துளை, சாலை, இயற்கை இடர்பாடு விபத்தை தவிர்க்க பொதுமக்களை ஈடுபடுத்தி விழிப்புணர்வு எற்படுத்திட இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் இருப்பின் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். அதே போன்று இயற்கை இடர்பாடுகளிலிருந்து தப்பிக்க அரசு மற்றும் பலதுறைகளின் மூலம் அளிக்கப்படும் விழிப்புணர்வை கடைப்பிடிக்க வேண்டும். ஆழ்துளை கிணறுகள் குறித்து தகவலை மாவட்ட ஆட்சியர் அல்லது 1070 மற்றும் 1077 இரண்டு எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். திருச்சி மாவட்டத்தில் பயன்படாத 200 க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளன. ஆழ்துளை கிணறு மட்டுமல்ல பாதுகாப்பற்ற கிணறுகளை கண்டறிந்து அனைத்து துறை மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பொதுமக்களின் குறைகளை உள்வாங்கிக்கொண்டு நிவர்த்தி செய்யவேண்டும், கரூர் மாவட்ட ஆட்சியர் குறித்த புகார் தனது கவனத்திற்கு வரவில்லை, அதுகுறித்து விசாரிக்கப்படும் என்றார். பொதுமக்கள் கூறும் நியாயமான குறைகளை அனைத்து மாவட்ட ஆட்சியரும் கவனம் செலுத்தி நடக்க வேண்டும் என்பதே உத்தரவு.நடுக்காட்டுப்பட்டி மீட்பு பணியின் போது அனைத்து வகையான மீட்பு கருவிகளும் கொண்டு வரப்பட்டன. துளையின் அகலம்குறைவாக இருப்பதால் அதனை பயன்படுத்த முடியவில்லை.
விஞ்ஞான ரீதியில் புதிய கண்டுபிடிப்புகள் ஏதேனும் இருப்பின் அதனை நடைமுறைக்கு கொண்டு வரப்படும். தமிழகத்தில் பயன்பாடற்ற 9 ஆயிரத்து 940 போர்வெல்கள் மழைநீர் சேமிப்பு கிணறு களாக மாற்றப்பட்டுள்ளன.விவசாயிகள் இடத்தில் 2 ஆயிரம் போர்வெல்கள் மூடப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியரிடம் இப்பணி ஒப்படைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதுடன், பலர் தாமாக முன்வந்து மூடிவருகின்றனர். எனவே அனைத்து நடவடிக்கைகளுக்கான அறிக்கையும் பெறப்பட்டு வருகிறது. அனைத்து வகையான விபத்துக்களையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கன்னியாகுமரி மற்றும் கஜா புயலின் போது காணாமல் போன மீனவர்களையும் கண்டறிந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. புயல் காலங்களில் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு முன்னதாகவே அறிவுறுத்துகிறோம். அதனை அறியாமல் சிக்குபவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் அரசு நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.