புதுதில்லி
மனித உடலில் முக்கிய உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகம் (கிட்னி) சராசரியாக 120 முதல் 150 வரை கிராம் எடையில் இருக்கும். அதற்கு மேல் இருந்தால் உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு ஏற்படும். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
ஆனால் தலைநகர் தில்லியில் சிறுநீரகத்தின் எடை தொடர்பாக மருத்துவ உலகமே தற்பொழுது அதிர்ச்சியில் உறைந்துள்ளது. தில்லியில் உள்ள கங்கா ராம் என்ற தனியார் மருத்துவமனைக்குச் சிறுநீரக வீக்கம் தொடர்பான சிகிச்சைக்கு வந்த நோயாளிக்கு ஸ்கேன் விபரத்தில் சாதாரண பிரச்சனை போன்று தான் இருந்ததால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். எப்பொழுதும் போல அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த பொழுது அந்த நோயாளியின் உடலில் பெரியளவில் சிறுநீரகம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். 7.4 கிலோ அளவில் இருந்த அந்த சிறுநீரகத்தை உடனடியாக மருத்துவர்கள் அகற்றினர். மனித உடலிலிருந்துஇருந்து நீக்கப்பட்ட அதிக எடையிலான சிறுநீரகம் என்ற பெயரில் கின்னஸ் சாதனை பதிவுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் மனித உடலில் இருந்து 4.25 கிலோ (2017-துபாயைச் சேர்ந்தவருக்கு) எடைகொண்ட கிட்னி அகற்றப்பட்டதே கின்னஸ் உலக சாதனையாகக் கருதப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.