நாகர்கோவில்:
ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை தாயகம் அழைத்து வர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழ்நாடு மீன் தொழிலாளர் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மீன் தொழிலாளர் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் ஜி.செலஸ்டின், பொதுச்செயலாளர் எஸ்.அந்தோணி, பொருளாளர் லோகநாதன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து அதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் அவசர கடமையாக செய்யவில்லை . வெளிநாடுகளிலுள்ள இந்தியர்கள் தாயகம் வர விரும்பியபோது அவர்களை கொண்டு வருவதில் மெத்தனம் காட்டியது. இப்போது பெரும்பாலான அந்நிய நாடுகள் இக்கொடூர தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவர்கள் தாயகம் வருவதிலும் சம்பந்தப்பட்ட நாடுகள் அவர்களை தாயகம் அனுப்பி வைப்பதிலும் பல சிக்கல்கள் உருவாகியுள்ளன. இதை உச்ச நீதிமன்ற விசாரணையின் போது மத்திய அரசு தாக்கல் செய்துள்ள உறுதி மொழி ஆவணத்தின் மூலம் அறிய முடிகிறது.
ஈரான் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்திய மீனவர்களில் குஜராத் மீனவர்களை தாயகம் கொண்டு வருவதில் மத்திய அரசு காட்டிய ஆர்வம் தமிழக மீனவர்களை கொண்டு வருவதில் காட்டவில்லை. பல இன்னல்களுக்கு உள்ளாகி தேவையான உணவு கிடைக்காமல் ஈரானில் வாடிவரும் நமது மீனவர்களுக்கு இப்பொழுது உணவையும் பாதுகாப்பையும் உத்தரவாதப் படுத்த வேண்டியுள்ளது. எனவே, இதில் தமிழக அரசு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்கட்சித் தலைவர்கள், தன்னார்வலர்கள் மத்திய அரசை வலியுறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு உடனடியாக ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்டுவர வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.