tamilnadu

img

மீண்டும் வனத்துறைக்கு நிலத்தை வழங்க முடிவு... அரசு ரப்பர் கழகம் முற்றிலும் முடங்கும் அபாயம்

நாகர்கோவில்:
குமரி மாவட்ட மக்களின் வேலை வாய்ப்பினை பாதுகாத்திட அரசு ரப்பர் கழகத்தின் நிலப்பரப்பினை வனத்துறைக்கு வழங்கும் முடிவை கைவிடவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலை வாய்ப்பை பெருக்கும் நோக்கத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தோட்டம் உருவாக்கப்பட்டு மூவாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். 

இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பின்னர் அரசு ரப்பர் தோட்டமானது 01.10.1984 முதல் அரசு ரப்பர் கழகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தை சீர்குலைக்கும் நோக்கில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசின்துணையுடன் உயர்மட்ட அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். இதன் துவக்கமாக பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மைலார், பெருஞ்சாணி ரப்பர் தொழிற்சாலைகளை மூடினார்கள். இதனைதொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு முன் ரப்பர் கழகத்திற்கு சொந்தமான 1000 ஹெக்டேர் பூமியினை வனத்துறைக்கு வழங்கப்பட்டது. இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் 1000 ஹெக்டேர் பரப்பளவு பகுதியினை வனத்துறையிடம் ஒப்படைக்க ரப்பர் கழகம் முடிவு செய்தது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. 

இதனால் குமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் முக்கியமான மாநில  அரசின் பொதுத்துறை நிறுவனமான அரசு ரப்பர் கழகமானது முற்றிலும் முடக்கப்படும்  நிலை ஏற்பட்டுள்ளது.அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் தற்போது பணிபுரியும் தொழிலாளர்கள் வேலை இழப்பதுடன் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகாது. எனவே உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்து ஏற்கனவே வனத்துறைக்கு ஒப்படைக்கப்பட்ட நிலப்பரப்பினை மீண்டும் ரப்பர் கழகத்திற்குஒப்படைப்பதுடன் தற்போது மீண்டும் 1000ஹெக்டேர் நிலத்தை வனத்துறைக்கு ஒப்படைப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள முடிவினை கைவிடுமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கட்சியின் குமரி மாவட்டக்குழு வலியுறுத்தி உள்ளது.