மயிலாடுதுறை:
கிறிஸ்தவத்தை பரப்புவதற்காக இந்தியா வந்து தமிழ் மொழிக்காக உழைத்து ஆசிய மொழிகளிலேயே தமிழை முதன் முதலாக காகிதத்தில் அச்சு இயந்திரம் மூலம் அச்சேற்றி கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளை தமிழில் முதன் முதலாக வெளியிட்ட ஜெர்மனி நாட்டவரான தமிழறிஞர் சீகன்பால்கு-வின் 302-வது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
1706 ஜூலை 9 தரங்கம்பாடிக்கு கப்பல் மூலம் வந்த சீகன்பால்குவுக்கு அப்போது வயது 24. என்றாலும் ஜெர்மானியம், கிரேக்கம், எபிரெயம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் அதீத புலமைப் பெற்றிருந்த சீகன்பால்கு, மிக குறுகிய காலத்திலேயே தமிழ் மொழியையும் கற்று தமிழறிஞராகவே மாறி தமிழின் பழம்பெரும் நூல்களான திருக்குறள், தொல்காப்பியம், ஆத்திச்சூடி உள்ளிட்ட நூல்களை பல மொழிகளில் மொழிப் பெயர்த்து அச்சிட்டு வெளியிட்டு உலகறியசெய்தார்.
சாதி, மத வேறுபாடுகளை உடைத்தெறிய பல்வேறு போராட்டங்களை தனது மனைவியுடன் செய்தவரான இவர்தான், ஆசிய கண்டத்திற்கே முதல் சீர்திருத்த கிறிஸ்தவ (புராட்டஸ்டாண்டு)போதகராவார். வெறும் 13 ஆண்டுகள் மட்டுமே தரங்கம்பாடியில் வாழ்ந்த சீகன்பால்கு கல்வி, கலாச்சாரம், சீர்திருத்தம், தமிழ் தொண்டு என பல புரட்சிகளை 300 ஆண்டுகளுக்கு முன்பே செய்தவர். 1719 பிப்ரவரி 23-ல்தனது 37-வது வயதில் தரங்கம்பாடி யிலேயே இறந்து போன அவரின் உடல்,அவரால் கட்டப்பட்ட ஆசியாவின் முதல் புராட்டஸ்டாண்டு தேவாலயமான ‘புதிய எருசலேம் ஆலயத்திலேயே’ அடக்கம் செய்யப்பட்டது.இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அவரது நினைவு தினத்தையொட்டி, புதிய எருசலேம் ஆலயத்தில் சிறப்பு வழிபாடும், அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்தில் மலர் தூவி,மாலைகள் அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.பின்னர் ஆலயத்தின் சபைகுரு சாம்சன் மோசஸ் தலைமையில் பேரணியாக சென்று கடற்கரை சாலையில் உள்ள சீகன்பால்கு சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செய்தனர். பிஷப்ஜான்சன் பள்ளியின் தலைமையாசிரி யர் ஜான் சைமன் மற்றும் ஆலய நிர்வாகிகள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.