நாகப்பட்டினம், மார்ச் 5- நாகை மாவட்டம் வேதாரணியம் வட்டத்தில் இந்தாண்டு 24 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை வாங்க அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மையான கொள்முதல் நிலையங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை, இணையதள வசதி சரிவர இல்லாமல் உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 15 நாட்களுக்கு மேலாக ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளுடன் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர். இதில் பஞ்சநதிக்குளப் பகுதியில் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகளில் அமர்ந்து உடனுக்குடன் கொள்முதல் செய்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துப் போராட்டம் நடத்தினர்.