புதுதில்லி:
நாடாளுமன்ற இரு அவைகளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் முழக்கத்தால் 3 ஆவது நாளாக முடங்கின. தில்லியில் போராடும் விவசாயிகள் பிரச்சனையை விவாதிக்கக் கோரி இரு அவைகளிலும் உறுப்பினர்கள் தொடர் முழக்கமிட்டனர்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்தியாவின் முக்கியமான 40 நபர்களின் செல்போன்கள் பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டதாகச் செய்தி வெளியிட்டது.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தது.
இதனையடுத்து ஏற்பட்ட அமளியில் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்தும் அமளி குறையாததால் நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மக்களவை மாலை நான்கு மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தும் அமளி குறையாததால் நாள் முழுக்க அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 12 மாநிலங்களில் 4 மொழிகளில் நாளிதழ்களை நடத்தும் டைனிக் பாஸ்கர் ஊடக நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனையை மேற்கொண்டனர். இந்த பிரச்சனை மற்றும் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து விளக்கம் கோரினர். எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை விரைவில் கூறி முடிக்குமாறு ஒன்றிய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தினார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த திரிணாமுல் எம்.பி சாந்தனு சென் தனது மேசையிலிருந்த காகிதங்களை கிழித்து எறிந்தார். இந்த சம்பவம் அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.