tamilnadu

img

வெங்காயம் அழுகிப்போன பின் மலிவு விலைக்கு விற்கத் தயாராம்... மக்கள் மீது மோடி அரசுக்கு வந்த திடீர் பாசம்

மும்பை:
இந்தியாவில் வெங்காயத்தின் விலை, கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருந்து வந்தது. வழக்கம்போல இந்தப் பிரச்சனையிலும் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியபோது, ‘நாங்கள் வெங்காயம் சாப்பிடாத குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; அதனால் எங்களுக்கு வெங்காய விலை உயர்வைப் பற்றி அவ்வளவாக தெரியாது’ என்று மத்திய பாஜக அமைச்சர்கள் ‘சாதிப்பெருமை’ பேசினர்.பின்னர், வெளிநாடுகளிலிருந்து வெங்காய இறக்குமதிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு மூன்று வாரங்களில் விலை குறையும் என்றும் ஒருவாறாக சமாளித்தனர்.ஆனால், தற்போதும் வெங்காயத்தின் விலை சமநிலைக்கு வரவில்லை. சராசரியாக 60 முதல் 70 ரூபாய்க்கு வெங்காயம் விற்கப்படுகிறது. இதுஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் போதுதான், எகிப்து, துருக்கி போன்ற வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 7 ஆயிரம் டன் வெங்காயம் துறைமுகங்களில் அழுகிக் கொண்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. 

இந்த வெங்காயம் கிலோ 45 ரூபாய் என்ற விலையில் இறக்குமதி செய்யப்பட்டதாகும். ஆனால், உள்நாட்டுச் சந்தையில் வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை கிலோ 23 ரூபாயாக குறைந்து விட்டதால், வெளிநாட்டு வெங்காயத்தை வாங்குவதற்கு வியாபாரிகள் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.இதனால், நவி மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் சுமார் 7 ஆயிரம் டன் வெங்காயம் கடந்த ஒரு மாதமாக தேங்கி, அழுகிக் கொண்டிருப்பதாக துறைமுக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.உள்நாட்டுச் சந்தையின் விலைக்குறைவுக்கு ஏற்ப, இறக்குமதி கட்டணங்களில் வியாபாரிகள் தள்ளுபடியை எதிர்பார்ப்பதாகவும், அரசு அதனை அளிக்க மறுப்பதால், வெங்காயம் வீணாகி அழுகிக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.இதனிடையே, ஒரு கிலோ வெங்காயத்தை 22 ரூபாய் என்ற மலிவு விலையில் வழங்க மோடி அரசு முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.