புனே:
இந்தியா இனிமேல், பெரும்பான்மை இந்துமக்களின் விருப்பப்படியே இயங்கும் என்று பாஜக தலைவரும், மகாராஷ்டிரா மாநில வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சருமான சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.மேலும், “இந்து பெரும்பான்மை சொல்வதற்கேற்ப நாடு நடைபோடும்; மதியம் 12 மணிக்கு நாடகப் பணிகளை (விநாயகர் திருவிழாவில்) பார்க்க வேண்டும் என்று இந்துக்கள் நினைத்தால், அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படலாம்” என்று ஆணவத்துடன் பேசியுள்ளார்.“அரசு நிர்வாகிகளும் இந்துக்கள், அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் விநாயகர் பண்டிகையை கொண்டாட வெளியே செல்கிறார்கள் என்றால், அரசு நிர்வாகம் தடையாக இருக்கிறது என்ற உணர்வு அவர்களுக்கு இருக்கக்கூடாது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில், மகாராஷ்டிர மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோலாப்பூர் மாவட்டத்தில், மக்களைச் சந்தித்த சந்திரகாந்த் பாட்டீல், அரசாங்கம் உதவி செய்யும் என்றெல்லாம் எதிர்பார்க்காதீர்கள்; அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வைக்காதீர்கள்; நீங்களாகவே உங்களை பார்த்துக் கொள்ளுங்கள் என்று பேசி சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.