tamilnadu

img

மீட்புக்கு அடையாளம் கரந்தைப் பூ! - ப.முருகன்

மனித சமூகம் வேட்டையாடுதலிலிருந்து விவசாய காலகட்டத்துக்கு மாறிய பொழுது - இனக்குழு சமூகமாக இருந்து சிற்றரசுகளாக மாறியது. இந்தக் காலத்தில் காலநடைகளே பெருஞ்செல்வமாகவும் விளங்கியது. நிலங்கள் அரசரின் உடைமையானது. இதனால் ஒருவர் மீது ஒருவர் போர்தொடுத்து அவற்றை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுதான் தமிழ் மண்ணிலும் நடந்தது. இத்தகைய போர் நடவடிக்கைளின் ஒரு பகுதியாகத்தான் ஆநிரை கவர்தல் இடம்பெற்றது. அப்போது இதில் ஈடுபட்டவர்கள் வெட்சிப்பூவைச்சூடியிருப்பர். இதனால் அது வெட்சித்திணை என்றழைக்கப்பட்டது. ஆனால் தங்களது கால்நடைகளை பறிகொடுத்தவர்கள் சும்மா இருப்பார்களா? மீட்பதற்கு முயற்சி செய்வார்கள் தானே. இந்த நட வடிக்கையில் ஈடுபடும் வீரர்கள் கரந்தைப் பூவைச் சூடியிருப்பார்கள் என்றும் அதனால் இது கரந்தைத் திணை என்றழைக்கப்படுகிறது என்று இலக்கணம் தமிழர்கள் வகுத்துள்ளனர். கரந்தைப்பூவின் தாவரவியல் பெயர் ஸ்பீராந்தஸ் இண்டிகஸ் (Sphaeranthus indicus) என்பதாகும். இந்த கரந்தைப்பூ எப்படி இருக்கும்? சிவப்பும் நீலமும் கலந்து கத்தரிப்பூ நிறத்தில் - வாடாமல்லி நிறத்தில், பந்து போன்று உருண்டையாக இருக்கும். அதில் வெண்ணிற இழைகள் நீட்டிக் கொண்டிருக்கும். இதை கொட்டைக்கரந்தை என்றும் அழைப்பார்கள்.  செங்கரந்தை எனப்படும் இது மருதநிலத்தில் வயல்வெளியில் முளைக்கும். ஆனால் இதை வேளாண் பெருமக்கள் களைச்செடியாகவே பார்ப்பார்கள். அதனால் இந்தச் செடிகளை வயலில் இருந்து பறித்து வெளியே எறிவார்கள். ஆனால் அறுவடை முடிந்த நிலத்தில் நிறைய கரந்தைச் செடிகள் முளைக்கும். அவற்றை விவசாயம் செய்யும் சமயத்தில் உழுது உரமாக்கிக் கொள்வார்கள். இந்தப்பூ விவசாய நிலத்தில் மட்டுமல்லாது கரட்டுப் பகுதியிலும் காட்டுப் பகுதியிலும் கூட முளைக்கும். ஆனால் அவற்றில் வெண் கரந்தையும் இருக்கும். செங்கரந்தைப்பூ சிவனுக்கு உகந்தது என்றும் அதனால் அவர் மகன் முருகனும் விரும்பும் பூ என்றும் கூறப்படுகிறது. எப்போது எங்கு மதம் நுழைகிறதோ பிரிவினையும் வந்து சேர்கிறது. இந்த கரந்தைப் பூவில் ஒரு வகை விஷ்ணு கரந்தை என அழைக்கப்படுகிறது. இது பேச்சு வழக்கில் விஷ்ணுகிரந்தி என்றும் குறிப்பிடப்படும். பொதுவாகவே கரந்தைச் செடியை கிரந்திச் செடி என்றே மக்கள் பேச்சுவழக்கில் குறிப்பிடுகிறார்கள். ஆனால் கரந்தைச் செடிகள் நிறைந்த கரட்டுப் பகுதியை கரந்தைமலை என்றழைக்கிறார்கள். மனிதர்களுக்கு கரந்தமலை என்று ஆண்களுக்கும் கரந்தி (கிரந்தி) என்று பெண்களுக்கும் பெயரிட்டு அழைக்கும் பழக்கம் இன்றும் இருக்கிறது. பொதுவாகவே எல்லாச் செடிகளும் ஏதாவதொரு மருத்துவக் குணத்துடனே இருக்கின்றன. கரந்தைப் பூவுக்கும் மருத்துவக் குணம் உண்டு. கரந்தை என்னும் பெயரில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓர் ஊர் இருக்கிறது. ஆனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் கரந்தை தமிழ்ச் சங்கம் ஒன்றமைக்கப்பட்டு கல்லூரியும் நடத்தப்படுவது நினைவில் கொள்ளத்தக்கது. கரந்து என்பது மறைந்து என்ற பொருளைத் தரும். ஆனால் நாம் கரந்தையை மறைக்காதிருப்போம். மறக்காதிருப்போம்.  -