டிரம்ப் வரிகளால் திண்டாடும் திருப்பூருக்கு ஒன்றிய அரசு என்ன செய்ய உத்தேசம் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய பொருட்கள் இறக்குமதிகளுக்கு அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் 50% வரி விதித்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகும், தமிழ்நாட்டின் பின்னலாடை மையமான திருப்பூரில், ரூ.1,500 கோடி முதல் ரூ.2,000 கோடி வரை மதிப்புள்ள பொருட்கள் தொழிற்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கிடங்குகளில் தேங்கி நிற்கிறதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (TEA) தலைவர் கே.எம். சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், திண்டாடும் திருப்பூருக்கு ஒன்றிய அரசு என்ன செய்ய உத்தேசம் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"துறைமுகத்தில், கிட்டங்கிகளில், தொழிற்சாலையில் ரூ.2000 கோடி பின்னலாடை தேக்கம்.
டிரம்ப் வரிகளால் திண்டாடும் திருப்பூருக்கு ஒன்றிய அரசு என்ன செய்ய உத்தேசம்?
* அவசரகால கடன் வழி உத்தரவாதம் (ECLG) வாயிலாக செயல் மூலதனம் வழங்கிடு.
* செயல்படா சொத்து (NPA ) கால வரையறையை 90 நாட்களில் இருந்து 180 நாட்களாக உயர்த்திடு.
* வட்டி விகிதத்தை குறைத்திடு.
திருப்பூர் தொழில்களை, வேலை வாய்ப்புகளை காப்பாற்று."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
